பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட கல்வி நடவடிக்கை! மாணவர்கள் அதிகளவானோர் வருகை (Photos)
நாட்டில் நிலவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் இன்று கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் ஏற்பட்ட பாரிய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்பட்டிருந்த போக்குவரத்து இடர்பாடுகளை கருத்தில் கொண்டே பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் வருகை அதிகமாக காணப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாக இருந்த போதிலும், சில பாடசாலைகளில் மாணவர்களின் வரவு அதிகளவில் காணப்பட்டதாக கல்வித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அவசரகால நிலையின் கீழ் ஆசிரியர்களுக்கு எரிபொருள் விநியோகத்தினை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி
நீண்ட நாட்களின் பின்னர் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாணவர்கள் ஆர்வத்துடன் பாடசாலைக்கு வருகை தந்துள்ளனர்.
செய்தி: எரிமலை
வவுனியா
கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வவுனியாவிலுள்ள அரச மற்றும் அரச அனுமதி பெற்ற அனைத்து பாடசாலைகளும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.
அத்துடன் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீடுகளிலிருந்தோ அல்லது இணையவழி கற்றல் செயற்பாடுகளின் மூலமாகவோ கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சினால் குறிப்பிட்டுள்ளது.
செய்தி: சதீஸ்









