வவுனியாவில் அனுமதியின்றி கட்டப்பட்ட வர்த்தக நிலையம்: நீதிமன்ற நடவடிக்கைக்கு தயாராகும் நகரசபை!
வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள பிரபல பீசா விற்பனை நிலையம் அமைந்துள்ள கட்டடம், அனுமதி பத்திரத்திற்கு முரணாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கட்டடத்தின் உரிமையாளருக்கு எதிராக வவுனியா நகரசபையால் எச்சரிக்கை துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நகரசபை கட்டளைச் சட்டங்களின் பிரகாரமும், நகரப்பகுதிக்குள் முன்னெடுக்கப்படும் கட்டடங்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் வவுனியா நகரசபையிடம் முறையான அனுமதி பெற்றிருக்கப்பட வேண்டும்.
நீதிமன்ற நடவடிக்கை
எனினும், குறித்த ஆதனத்தில் நகரசபையால் கடந்த 2022ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதிக்கு முரணாக கட்டடம் அமைக்கப்பட்டு வணிக ரீதியிலான நோக்கத்தில் இக் கட்டடம் இயங்குவதனால் அது தொடர்பாக குறிப்பிட்ட சில ஆவணங்களை நகரசபைக்கு சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தது.
அந்தவகையில், திருத்திய வரைபடத்திற்கான கட்டட அனுமதி, அனுமதிக்கப்பட்ட வரைபடத்திற்கான குடிபுகு சான்றிதழ், சுற்றுச் சூழல் உரிமம், வியாபார உரிமம் ஆகியவற்றை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சபையால் கோரப்பட்டிருந்தது.
எனினும், அது சமர்ப்பிக்கப்படாத நிலையில் மீளவும் 7 நாட்களுக்குள் அந்த ஆவணங்களை வழங்குமாறு கடந்த 5ஆம் திகதி சபையின் செயலாளரால் துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலின் பிரகாரம் செயற்ப்படத் தவறின் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திருத்தச் சட்டங்களின் பிரிவுகளை மீறி நகரசபையின் அனுமதி பத்திரத்திற்கு முரணாக கட்டடம் அமைத்து செயற்படுவதாக கருதி நீதிமன்ற நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என அறிவித்தல் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |