மீண்டும் வழமைக்கு திரும்பும் டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மலையக புகையிரத சேவை
டிட்வா சூறாவளியால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் முற்றாகத் தடைப்பட்டிருந்த மலையக புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் பல மாதங்களாக பாரிய வருமான இழப்பை எதிர்கொண்டிருந்த புகையிரத திணைக்களத்திற்கும், மலையக சுற்றுலாத்துறைக்கும் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார இழப்பு
கடந்த ஆண்டு நாட்டை பாதித்த டிட்வா சூறாவளி காரணமாக மலையகப் பகுதிகளில் பல இடங்களில் புகையிரத பாதைகள் சேதமடைந்தன.
குறிப்பாக பதுளை கொழும்பு பிரதான வீதியில் கண்டி தொடக்கம் பதுளை வரையிலான பாதையில் ஏற்பட்ட மண் சேதங்கள் காரணமாக மலையகத்திற்கான புகையிரத போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த சேவைத் தடை காரணமாக புகையிரத திணைக்களம் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது.
அதேவேளை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரிகளின் தகவலின்படி, ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு சாதாரண நாட்களில் நாளொன்றுக்கு சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வருமானம் கிடைத்ததுடன், சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலங்களில் நாளொன்றுக்கு இரண்டு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் ரூபா வரையில் வருமானம் ஈட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத நிலைய வருமானம்
அதேபோன்று, கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு நாளொன்றுக்கு ஐம்பதாயிரம் முதல் அறுபதாயிரம் ரூபா வரையிலும், தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு சாதாரண நாட்களில் சுமார் ஒரு இலட்சம் ரூபா வரையிலும் வருமானம் கிடைத்துள்ளது.
யாத்திரை மற்றும் சுற்றுலா பருவங்களில் தலவாக்கலை நிலையத்தின் வருமானம் இரண்டு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் ரூபா வரையிலும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நானுஓயா புகையிரத நிலையம் மலையக சுற்றுலாவின் முக்கிய நுழைவாயிலாகக் கருதப்படுவதால், சாதாரண நாட்களில் சுமார் இரண்டு இலட்சம் ரூபாவும், பருவ காலங்களில் நாளொன்றுக்கு ஏழு முதல் எட்டு இலட்சம் ரூபா வரையிலும் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த அனைத்து நிலையங்களும் குறித்த வருமானங்களை இழந்துள்ளதுடன், சுற்றுலா மற்றும் வணிக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
புகையிரத பாதை புனரமைப்பு
இந்த நிலையில், டிட்வா சூறாவளியால் சேதமடைந்த புகையிரத பாதைகளை புனரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.
அதன் ஒரு பகுதியாக பதுளை முதல் அம்பேவலை வரையிலான புகையிரத சேவைகள் ஏற்கனவே மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், அம்பேவலை பகுதியிலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றர் தொலைவில் சேதமடைந்திருந்த இறுதி பாதைப் பகுதியின் புனரமைப்பு பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் பகுதி இன்று புகையிரத திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பதுளை முதல் நானுஓயா வரையிலான முழுமையான புகையிரத சேவையை எதிர்வரும் 18ஆம் திகதி முதல் மீண்டும் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல மாதங்களாக காத்திருந்த மலையக மக்களும், சுற்றுலாத்துறையினரும், வணிகர்களும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளதுடன், புகையிரத சேவை முழுமையாக வழமைக்குத் திரும்புவதன் மூலம் பிரதேச பொருளாதாரமும் சுற்றுலாத்துறையும் மீண்டும் புத்துயிர் பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam