அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை உணவகத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பம்பலப்பிட்டிய பகுதியில் போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரை நிர்ணயிக்கப்பட்ட விலையை அதிக விலைக்கு விற்பனை செய்த உணவகத்திற்கு பத்து இலட்சம் ரூபாய் அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 04 - காலி வீதியில் அமைந்துள்ள குறித்த உணவகத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று(01.10.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மேற்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளது.
வழக்கு விசாரணையின் பொழுது, குறித்த நிறுவனம் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதையடுத்து, இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலை
சிறப்பு வர்த்தமானி எண் 2492/29-இன் ஆணை எண் 96-இன் படி, 500 முதல் 999 மில்லிலிட்டர் வரையிலான போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை ரூ. 80 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கேள்விக்குட்பட்ட அந்த உணவகம் 500 மில்லிலிட்டர் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை ரூ. 100க்கு விற்றதாகக் குற்றம் சாட்டி நுகர்வோர் விவகார அதிகாரசபை ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை, உணவகங்கள் அல்லது தங்கும் விடுதிகள் உட்பட எந்தவொரு வணிக இடத்திலும் அந்த விலைக்கு மேல் விற்க முடியாது என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.