முல்லைத்தீவில் சீல் வைக்கப்பட்ட உணவகம் - சோதனையில் சிக்கிய பழுதடைந்த உணவுகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட இரு உணவகங்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து, சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நேற்றைய தினம்(18.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து கோம்பாவில் பொது சுகாதார பரிசோதகர் துக்குடியிருப்பு நகரை அண்டிய உணவகங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டுள்ளார்.
சீல் வைக்கப்பட்ட உணவகம்
இதன்போது, சுகாதார சீர்கேட்டுடன் உணவுகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டமை, ஈக்கள் மொய்த்த நிலையில் உணவுகள் வைக்கப்பட்டமை, பாத்திரங்களை தூய்மையாக வைத்திருக்காமை, மருத்துவ சான்றிதழ் இன்றி ஊழியர்கள் உணவுகளை கையாண்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இரு உணவகங்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரு உணவகங்களுக்கும் தலா முப்பதாயிரம் ரூபாய் வீதம் மொத்தமாக அறுபதாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளதுடன், புதுக்குடியிருப்பு - பரந்தன் பிரதான வீதியில் அமைந்திருந்த ஒரு உணவகத்தை சீல் செய்வதற்கும் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், நேற்றைய தினம்(18.05.2026) அதிகாரிகள் இணைந்து நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
பொது சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத விற்பனை நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்திலும் திடீர் சோதனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

