தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு
அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவர்லி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு மற்றும் போட்மோர் உள்ளிட்ட தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
சம்பளக் கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 02ஆம் திகதி சுமார் 600 தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒரு கிலோகிராம் தேயிலை கொழுந்துக்கு 90 ரூபா என்ற அடிப்படையில் கொழுந்து பறிக்குமாறு நிர்வாகம் அறிவுறுத்தியதாகவும், இதன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதாகவும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
முறைப்பாடு முன்வைப்பு
இதனையடுத்து, இந்தப் பிரச்சினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று 05ஆம் திகதி அக்கரப்பத்தனை ஆக்ரா கிளப்பில், அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவன நிர்வாகத்துடன் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 1,750 ரூபா தினசரி சம்பளத்திற்கு பதிலாக, சில நாட்களில் 1,350 ரூபா என்ற அடிப்படையில் சம்பளம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதமும் இந்த மாதமும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 1,350 ரூபா என்ற அடிப்படையில் சம்பளம் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு, அவர்களுக்கு உரிய 1,750ரூபா முழுமையான சம்பளத்தை கணக்கிட்டு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
மேலும், சம்பளப் பதிவுகளை மீள்பரிசீலனை செய்து, எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் முழுமையான 1,750 ரூபா சம்பள அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சட்டபூர்வ உரிமைகள்
தொழிலாளர்களின் EPF, ETF மற்றும் சேவைக்கால கொடுப்பனவு உள்ளிட்ட சட்டபூர்வ உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் சம்பளக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என ஜீவன் தொண்டமான் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, எல்பியன் தோட்டத்தில் தற்போது மூடப்பட்டுள்ள தேயிலைத் தொழிற்சாலையை எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதிக்குள் அல்லது தீபாவளிக்கு முன்னதாக மீண்டும் திறக்க நடவடிக்கை எடுப்பதாகவும் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
வெவர்லி தோட்டத்தில் மூடப்பட்டுள்ள தேயிலைத் தொழிற்சாலையையும் மீண்டும் இயக்குவதற்கான புதிய திட்டமொன்றை தயாரித்து, தேவையான அளவு தேயிலை கொழுந்தை பெற்றுக்கொண்டு தொழிற்சாலையை விரைவில் மீளத் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகள் மற்றும் சம்பள உரிமைகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என வலியுறுத்திய ஜீவன் தொண்டமான், இதுபோன்ற சம்பளப் பிரச்சினைகள் மீண்டும் ஏற்படுமானால் தொழிற்சங்கத்தின் ஊடாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் சகாவுடன் மாணிக்கக்கல் மற்றும் புதையல் தோண்டிய ஞானசார தேரர்: கசியும் இரகசியங்கள்



