உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் குழுவையும் பதிவு செய்ய கரைச்சி பிரதேச சபையில் தீர்மானம்
உள்ளூராட்சி மன்றங்களின் சட்ட புத்தகத்தில் பிரதான உப குழுக்களில் ஒன்றாக பெண்கள் குழுவையும் பதிவு செய்வதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்வது தொடர்பான பிரேரணை கரைச்சி பிரதேச சபையில் ஏகமானதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற கரைச்சி பிரதேச சபையின் மாதாந்த அமர்விலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையின் அமர்வு உப தவிசாளர் சி.தவபாலன் தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது கரைச்சி பிரதேச சபையின் பெண்கள் குழுவினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கபட்டமை தொடர்பில் பாராட்டப்பட்டதுடன், உள்ளூராட்சி மன்றங்களின் சட்ட புத்தகத்தில் பிரதான உப குழுக்களில் ஒன்றாக பெண்கள் குழுவையும் பதிவு செய்வதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்வது தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பில் சபை உறுப்பினர்கள் அனைவராலும் வரவேற்கப்பட்டதுடன், ஏகமானதாக குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதற்கான அடுத்த கட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதுடன், ஏனைய சபைகளிற்கும் இது தொடர்பில் கவனத்திற்கு கொண்டு செல்வது தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற சட்ட கோவையில் ஏற்கனவே நான்கு குழுக்கள் இருக்கின்றன. அச்சட்டத்தின் படி நான்கு குழுக்கள் மாத்திரமே சாதாரணமாக இருக்க முடியும்.
1. நிதிக்குழு
2. வீடமைப்பு சமூக அபிவிருத்தி குழு
3. சுற்றாடலும் வாழ் வசதிகளும் குழு
4. தொழில்நுட்ப குழு என்ற நான்கு சட்டங்களுடன் ஐந்தாவது குழுவாக பெண்கள் குழு கரைச்சி பிரதேச சபையில் உருவாக்கி இருந்தது.
குறித்த குழுவிற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லாத போதிலும் பல்வேறு திட்டங்கள், பெண்கள் சிறுவர்களிற்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
குறிப்பாக சத்துணவு திட்டம் இதில் முதல் இடம் பிடிக்கின்றது. இந்த நிலையில் குறித்த குழு தனித்து இயங்க சபையின் ஊடாக அனுமதி கோரி இன்று பிரேரணை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



