புதுக்குடியிருப்பு வர்த்தக நிலையங்களில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றம்
புதுக்குடியிருப்பிலுள்ள பலசரக்கு கடைகளில் புகைத்தல் பாவனை பொருட்கள் விற்பனை செய்வதனை கட்டுப்படுத்துதல் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான முதலாவது பிரதேசசபை அமர்வு நேற்றையதினம் (29.01.2026) புதுக்குடியிருப்பு பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
சபை அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர்
மேலும் கருத்து தெரிவிக்கையில், இவ்வாண்டு புதுக்குடியிருப்பு பிரதேசசபை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அபிவிருத்தி மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
இரண்டு பிரதேச செயலகங்களை கொண்ட பரந்துபட்ட எல்லையாக புதுக்குடியிருப்பு பிரதேசசபை இருக்கின்றது. வீதி வேலைகள், மின்விளக்கு பொருத்துதல் ஏனைய மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்கள் போன்ற நீண்ட வேலைப்பாடுகள் உடைய திட்டங்கள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையால் 2026ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

இன்றைய சபை அமர்வில் சபை உறுப்பினர்களின் பிரேரணை மூலம் மதுபானசாலை முன்பாக, மதுபானங்களை அருந்திவிட்டு போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பது, பலசரக்கு கடைகளில் புகைத்தல் பாவனை பொருட்களை விற்பனை செய்வதனை கட்டுப்படுத்துவது தொடர்பில் உறுப்பினர் கு.அகிலனின் பிரேரணை சபைக்கு கொண்டுவரப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் மணல், கிரவல் வேலைதிட்டங்கள் எதிர்காலத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசசபையால் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
அது தொடர்பான முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட பகுதி மக்களுக்கும் தேவையான மணல், கிரவலை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
மக்களின் கோரிக்கைக்கு அமைவாக
அந்தவகையில் மக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்க கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்து வருகின்றோம். குறிப்பாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நிலங்களிலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கென பல்வேறுபட்ட நிதி மூலங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசபைக்கு சொந்தமான வீதிகள் புனரமைப்பு செய்வது தொடர்பாக ஏனைய திணைக்களங்கள் முறையாக எம்மிடம் ஒப்புதல்களை பெற்று வீதி அபிவிருத்தி வேலை திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தது.
புதுக்குடியிருப்பு எல்லைப்பகுதிகறில் குறிப்பாக காட்டு பிரதேசங்களில் இருக்கும் மின்விளக்குகள் தொடர்பாக அந்த பகுதி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட இருப்பதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




