மன்னார் மாவட்டத்தின் தற்போதைய கோவிட் நிலைப்பாடு தொடர்பாக ஆராய்வு
மன்னார் மாவட்டத்தில் தற்போது பெண்களுக்கான கோவிட் சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், மேலும் 400 கட்டில்கள் போடக்கூடிய வகையில் மேலும் ஒரு கோவிட் சிகிச்சை நிலையமொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் சுகாதாரத்துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் தற்போதைய நிலைமை தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான்,சுகாதார திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், இராணுவ பொலிஸ் அதிகாரிகள்,திணைக்கள தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் தொற்றின் தற்போதைய நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்பது தொடர்பாகவும், அதனை எவ்வாறு கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாப்பது தொடர்பாகவும் துறை சார்ந்த திணைக்கள தலைவர்களோடு முப்படையினரும் இணைந்து இந்த செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றோம்.
தற்போதைய சூழ்நிலையில் எங்களுடைய மாவட்டத்தில் நோயாளர்களுக்கு என ஏற்படுத்த இருக்கின்ற தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் 80 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
அவர்களில் 15 பேர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.ஏனையவர்கள் வவுனியா , கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிக்கையின் படி அதிகமானோர் இந்த வாரம் தங்களுடைய சிகிச்சை நிறைவு செய்து தங்களுடைய வீடுகளுக்குச் செல்ல உள்ளனர்.
மேலும் நாங்கள் இன்னும் 400 கட்டில்கள் போடக்கூடிய வகையில் மேலும் ஒரு சிகிச்சை நிலையத்தை நாங்கள் ஒழுங்குபடுத்திக் கொண்டு இருக்கின்றோம். இன்னும் இரண்டு வாரங்களில் நாங்கள் அதனையும் செயற்படுத்தப்படக் கூடியதாக இருக்கும்.
எங்களுடைய மாவட்டத்திலிருந்து அத்தியாவசிய தேவைகளின் அடிப்படையில் வெளி மாவட்டத்திற்கு மீன் ,மரக்கறி ,நெல் ,அரிசி , போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் கொண்டு வருவதற்கும் அவர்களுக்கு அனுமதிப் பத்திரத்தை வழங்கி வருகின்றோம்.
அதனடிப்படையில் அத்தியாவசிய பொருட்கள் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மக்களுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை. ஒவ்வொரு கிராமங்களிலும் நடமாடும் சேவையின் மூலம் மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து இருக்கின்றோம்.
அரசின் கோரிக்கைக்கு அமைவாக கிராமங்கள் தோறும் 'கோவிட் ' தொடர்பான கிராமிய குழுக்கள் அமைத்து அதன் மூலம் கிராமங்களில் இந்த கோவிட் காலப்பகுதிகளில் உள்ள தேவைகளைப் பூர்த்தி செய்யவும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு இருக்கின்றோம்.
இதனை பிரதேச செயலாளர்கள்,கிராம அலுவலகர்கள் தலைமை தாங்கி நடாத்துவார்கள். அவர்கள் மூலம் அந்த கிராமங்களிலிருந்து வரும் பிரச்சனைகளை நாங்கள் தீர்ப்பதற்குத் தயார் நிலையில் இருக்கின்றோம்.
தற்போது மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் 73 குடும்பங்களும் , மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 23 குடும்பங்களும், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 80 குடும்பங்களும் , நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 34 குடும்பங்களும் , மடு பிரதேச செயலாளர் பிரிவில் 3 குடும்பங்களும் தற்போது சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
அவர்களின் வருமானம் குறைந்த குடும்பங்களாக , அரச உத்தியோகத்தர்கள் இல்லாமல்
உயர் வருமானங்கள் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கான உலர் உணவு
விநியோகம் எங்களுடைய பிரதேச செயலகங்கள் மூலம் வழங்கப்பட்ட நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



