யாழில் தரித்து நின்ற கடற்றொழில் படகு கடற்படையால் மீட்பு
யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி வலையை பயன்படுத்தி கடற்றொழில் படகு ஒன்று வெற்றிலைக்கேணி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று (06.04.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத கடல் நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படை தொடர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சோதனை நடவடிக்கை
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று (06) அதிகாலை நாகர்கோவில் கடற்பகுதியில் தரித்துநின்ற சந்தேகத்திற்கிடமான படகை சோதனை செய்த போது குறுகிய கண்களை கொண்ட சட்டவிரோத சுருக்குவலையை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட படகு நாகர்கோவில் பகுதியை சேர்ந்தென்றும் கடற்படையின் வருகை அறிந்து சந்தேக நபர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் கடற்படை தெரிவித்ததுடன் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த சிலர் கடற்படையுடன் முறுகலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கைப்பற்றப்பட்ட படகு உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |