கோட்டாபயவின் திட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்பு! அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றம்
இந்த அரசாங்கமும் பேச்சளவில் திட்டங்களை குறிப்பிடுகிறதே தவிர, நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டங்களையும் முன்வைக்கவில்லை என விவசாய ஒருங்கிணைப்பு சங்கத்தின் தலைவர் அனுராத தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பாதிப்பு
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,''முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிமுகப்படுத்திய சேதன பசளைத் திட்டத்தாலும், இயற்கை அனர்த்தங்களாலும் விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள்.
இந்த அரசாங்கமும் பேச்சளவில் திட்டங்களை குறிப்பிடுகிறதே தவிர, நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டங்களையும் முன்வைக்கவில்லை. பொருளாதார நெருக்கடியினாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அரசாங்கம் குறிப்பிட்டதை போன்று நிவாரணம் முறையாக கிடைக்கப் பெறவில்லை. ஆகவே ஒரு கிலோகிராம் நெல்லுக்கான உத்தரவாத விலையை 140 ரூபாவாக நிர்ணயிக்க வேண்டும்.
பெரும்போக விவசாய விளைச்சல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படவில்லை. இறுதி கட்டத்தில் மிகவும் குறைந்த அளவில் விலை நிர்ணயிக்கப்படும்.
அச்சந்தர்ப்பத்தில் மாற்று வழியேதும் இல்லாத காரணத்தால் விவசாயிகள் குறைந்த விலைக்கு நெல்லை விநியோகிக்க நேரிடும்.
அரிசியின் விலை
மறுபுறம் பிரதான அரிசி உற்பத்தியாளர்களின் மாபியாக்களுக்கும் விவசாயிகள் அகப்பட வேண்டிய நிலை ஏற்படும். அறுவடையின் பெரும்பாலான பங்கை பிரதான வர்த்தகர்கள் கொள்வனவு செய்து அரிசியின் விலையை அவர்கள் தீர்மானிப்பார்கள்.
இதனால் சந்தையில் அரிசி விலை உயர்வடையும், நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள். இவையனைத்தையும் அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்.
விவசாயிகளிடமிருந்து நெல்லை நேரடியாக கொள்வனவு செய்வதற்கும், சிறந்த உத்தரவாத விலையை தீர்மானிப்பதற்கும் இதுவரையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.'' என கூறியுள்ளார்.