12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது : ராமேஸ்வர கடற்தொழிலாளர் சங்கத்தினர் விடுத்துள்ள கோரிக்கை (Photos)
நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் கடற்தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்திய கடற்தொழிலாளர்கள் நேற்று நெடுந்தீவு அருகே கடற்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி கடற்தொழில் ஈடுபட்டதாக 12 கடற்தொழிலாளர்களை கைது செய்துள்ளதுடன், அவர்களது விசைப்படகு ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை விசாரணைக்காக மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட 12 பேரையும் நீதிமன்றத்தில் முன்னிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை அரசை மீட்பதற்காக இந்திய அரசு பல கோடி ரூபாய் நிதி உதவி அளித்து வரும் நிலையில் எல்லை தாண்டியதாக 12 தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்ததற்கு ராமேஸ்வரம் கடற்தொழில் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் கடற்தொழில் துறைமுகத்திலிருந்து நேற்று காலை 400 க்கும் மேற்பட்ட விசைப்படகில் அனுமதிச் சீட்டு பெற்று கடற்தொழிலாளர்கள் கடற்தொழிலுக்கு சென்றுள்ளனர்.
மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை படகுடன் விடுதலை
செய்ய மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இதன்போது கோரிக்கை முன்வைத்துள்ளனர்.