மலையகத்தில் சித்த மருத்துவ சேவைகளை விரிவுபடுத்த கோரிக்கை
மலையகப் பகுதிகளில் சித்த மருத்துவ சேவைகளை விரிவுபடுத்துவதற்கான பல்வேறு பரிந்துரைகளை உள்ளடக்கிய மனு ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் இணைப்பாளர் வர்ணகுலசிங்கம் பிரவீன், நேற்று(10) நாடாளுமன்ற வளாகத்தில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரிடம் குறித்த மனுவை கையளித்தார்.
சித்த மருத்துவம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்களால் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய மருத்துவ முறையாகும்.
சித்த மருத்துவ சேவை
இருப்பினும், சித்த மருத்துவத்தின் முக்கியத்துவம் தொடர்பாக அரசாங்க மட்டத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், இந்தத் துறையில் கல்வி கற்கும் மாணவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலையக மக்களுக்கு பாரம்பரிய மருத்துவ சேவைகளை நெருக்கமாக கொண்டு செல்வதற்கும், சித்த மருத்துவத் துறையில் கல்வி கற்கும் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்தக் கோரிக்கைகள் உதவும் என அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்து, எதிர்காலத்தில் நடைமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட தரப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


