நாடாளுமன்ற உறுப்பின் ரிஷாட் முன்வைத்துள்ள கோரிக்கை
தமது அடிப்படை உரிமைகள் மனுவின் இறுதி தீர்மானம் வரும்வரை, தம்மை குற்றப்புலனாய்வு தடுப்பில் இருந்து, தமது வசிப்பிடத்துக்குள் கட்டுப்படுத்தும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கோரியுள்ளார்.
இது தொடர்பில் இன்று மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்பு பிரிவின் கீழ் ரிஷாத் பதியுதீன் தற்போது குற்றப் புலனாய்வுத் துறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் பிரிவு 11இன்படி, ஒரு சந்தேகத்துக்குரியவரை அவர் வசிக்கும் இடத்திற்கு நகர்த்துவதற்கான ஒரு உத்தரவை பிறப்பிக்க, பாதுகாப்பு அமைச்சருக்கு அதிகாரங்கள் உள்ளதாக இந்த மனுவை சமர்ப்பித்த சட்டத்தரணி பைசர் முஸ்தபா சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் வேகமாக பரவி வரும் கோவிட் 19 தொற்றுநோயால் தனது வாடிக்கையாளர் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர் என்றும், குற்றப்புலனாய்வுத்துறையில் தடுத்து வைக்கப்படுவதன் மூலம் அவரது உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் முஸ்தபா கூறினார்.
உச்சநீதிமன்றத்தால் இடைக்கால நிவாரணம் வழங்கப்படாவிட்டால், அவருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு மற்றும் சேதம் ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் குறித்த கோரிக்கை தொடர்பாக சட்டமா அதிபரின் கருத்து 2021, ஜூலை 15 ம் திகதி மன்றில் தெரிவிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே ரிஷாட் பதியுதீனையும் அவரது சகோதரரையும் விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் மனுக்கள் இன்று நீதியரசர்கள் விஜித் மலல்கொட, காமினி அமரசேகர மற்றும் முர்டு பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மூன்று நீதியரசர்கள் முன் விசாரணைக்கு வந்தபோதே ரிஷாட் பதியுதீன் சார்பில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.