ஆபத்தான விடயங்களை உள்ளடக்கிய புதிய பயங்கரவாத சட்ட வரைபு! சட்டத்தரணி தகவல்
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்ட வரைபு ஆபத்தான விடயங்கள் பலதை கொண்டுள்ள நிலையில் ஜே விபி யின் சிங்கள தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் என்ற விடயம் காணப்படவில்லை என சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி குமார வடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.
சட்டம் மற்றும் கொள்கைக்கான யாழ்ப்பாண கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் தந்தை செல்வா அரங்கில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்திருந்தனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகின்ற விடயமானது என்.பி.பியின் சிங்கள மொழி மூல தேர்தல் விஞ்ஞானபத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என ஜே.வி.பியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான லயனல் போபகேயின் அண்மைய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி புதிதாக அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டம் ஒன்றை கொண்டு வர என்.பி.பி அரசாங்கம் தயங்கும் நிலையில், தற்போது அது வரைவாக காணப்படுகின்றது.
தமிழர் தரப்பினுடைய நிலைப்பாடு பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் அதற்குப் பதிலீடாக வேறெந்தச் சட்டமும் தேவையற்றது என்ற கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் தற்போது நிலவுகின்ற தண்டனைச் சட்டக்கோவை, குற்றவியல் நடைமுறைக் கோவை மற்றும் இதர குற்றவியல் சட்டங்களின் ஏற்பாடுகளில் பேருக்குப் பின்னரான சமூக நிலைமை கையாளப்படக் கூடியது, அதற்கென தனித்து பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டம் தேவை அற்றது.
பயங்கரவாத சொற்தொடருக்கான வரைவிலக்கணம்
சர்வதேச சட்டத்தில் இதுவரை ஏற்கப்பட்ட பயங்கரவாதமென்ற சொற்தொடருக்கான வரைவிலக்கணம் இல்லாத நிலையில் குறித்த சட்டத்திலே பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணமானது மிகவும் நெகிழ்வுப் போக்கான நிலையிலே அனைத்தையும், எதையும் உள்வாங்கலாம் என்ற தொனியிலே முன்வைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்தல், பொதுமக்கள் ஒன்றுகூடக் கூடாதென்ற அறிவித்தலை வழங்கல், கூட்டத்தைக் கூட்டுவதற்குத் தடை விதித்தல் போன்ற அவசரகால தடைச் சட்டத்தின் தற்காலிகக் கட்டளைகளை மேற்கொள்ளும் விடயங்களைக் கூட நிதந்தரச் சட்டமாகக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்படுகின்றது.
அரகலய போராட்டத்தின் பயனாக உருவாகிய அரசாங்கம் மீண்டும் ஒரு அரகலய உருவாகுவதனைத் தடுக்கும் விதமாக இந்தச் சட்டத்தினை உருவாக்குவதாகவும், தமிழ் மக்களினுடைய அரசியற் போராட்டத்தினை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் கொண்டிருக்கிறது.
சட்ட வரைவு தொடர்பில் எதிர்ப்பு
ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபவர்களை அச்சுறுத்தும் பாணியிலான சட்ட ஏற்பாடுகளைக் கொண்டதாக முன்மொழியப்பட்ட சட்ட வரைபு கொண்டிருப்பதோடு குறித்த சட்ட வரைபினை தமிழ் மக்கள் முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும்.
ஆகவே குறித்த சட்ட வரைவு தொடர்பில் எமது எதிர்ப்புக்களை பதிவு செய்வதோடு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த சட்டத்தை எதிர்ப்பதற்கு முழுமையான பங்களிப்பினை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், கட்சியின் தேர்வு நிலைத் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வேலன் சுவாமிகள், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சர்வேஸ்வரன், குரலற்றவர்களின் குரல் மு.கோமகன், கிராமிய உழைப்பாளர் சங்கத் தலைவர் இன்பம், யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் யசோதரன், சமூக செயற்பாட்டாளர் முரளிதரன் உள்ளிட்ட சமூக அரசியற்செயற்பாட்டாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam