தியாக தீபம் திலீபனின் சிலையை அகற்றியதன் மூலம் பால் குடிக்கும் பிள்ளைகளின் உள்ளத்திலும் சிலையை உருவாக்கிவிட்டீர்கள் – அருட்தந்தை சத்திவேல்
தியாகத் தீபம் திலீபனுக்காக அமைக்கப்பட்டிருந்த சிலையை பொலிஸார் அகற்றிச் சென்றதன் மூலம், எங்கள் தேசத்தில் பால் குடிக்கும் பிள்ளைகளின் உள்ளங்களிலும் திலீபனின் சிலையை உருவாக்கிவிட்டீர்கள் என சமூக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (01.10.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வரலாற்றை மறைக்க சிலை அகற்றல்
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவின் காந்தியம் போதிக்கும் அகிம்சையும், இலங்கையில் புத்தனின் தர்மமும் தமிழர்களின் அரசியல், கலாச்சார, பண்பாட்டு வரலாற்றில் தோல்வி கண்டதில் உச்ச கட்ட வெளிப்பாட்டின் அடையாளமே தியாக தீபம் திலீபனின் உயிர்த்தியாகமாகும். அத்தகைய தோல்வி வரலாற்றினை மறைக்கவே தியாக தீபத்தின் சிலை அகற்றப்பட்டது.
இதுவே பயங்கரவாதம். மாற்றத்திற்கென வந்து ஆட்சி அமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் கடந்த கால ஆட்சியாளர்களைப் போல தமிழர்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து நிகழ்த்தும் பயங்கரவாத கொடூரத்தினை வன்மையாக கண்டிப்பதோடு தற்போது தமிழர்கள் அடைந்துள்ள உளவியல் மற்றும் அரசியல் கொதிநிலையை சரி செய்ய அறத்தின் பக்கம் நின்று தியாக தீபம் திலிபனின் சிலையினை உரிய மக்கள் கௌரவத்துடன் மீளவும் அது வைக்கப்பட்டிருந்த நிலை நிறுத்துமாறு ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கேட்டுக் கொள்கின்றோம்.

இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத அரச கட்டமைப்பின் தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட பயங்கரவாத செயற்பாடுகளுக்குஎதிராக அகிம்சை வழி போராட்டத்தினை தேர்ந்தெடுத்து உணவு மற்றும் நீர் என்பவற்றைத் தவிர்த்து தம் உடல் வருத்தி பல்லாயிரக்கணக்கானோர் பார்த்திருக்க அவர்களின் கண்ணீர் புலம்பலுக்கு மத்தியிலே உயிர் துறந்தார். அவரை பயங்கரவாதியாக்குவதும், அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தி வணக்கம் செலுத்துவதையும், அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் எழுச்சி கொள்வதையும் பயங்கரவாதமாக்குவது ஏன்?
தேசிய மக்கள் சக்திக்குள் மறைந்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணி அரச கட்டமைப்பின் பயங்கரவாதத்திற்கு எதிராக இரண்டு சந்தர்ப்பங்களில் ஆயுதம் ஏந்திய வரலாற்றை மறந்து தமிழர்களின் நீதிக்கான அகிம்சை வழி ஒன்று கூடுதலை பயங்கரவாதமாக்குவது ,அவர்களே அவர்களின் மனசாட்சியை கொன்றதையே வெளிப்படுத்துகின்றது. தமிழர்களின் தாயகத்தில் யுத்த வெற்றி அடையாளமாக உங்களால் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து சின்னங்களும், யுத்த காலத்திலும் அதன் தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கின்ற சிங்கள பௌத்த மத அடையாளங்களும், சிங்கள புத்தர் சிலைகளும், விகாரைகளும், தூபிகளும், நடப்பட்டு இருக்கும் அரச மரங்களும் தமிழர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தின் அடையாளமாகவே நாம் காண்கின்றோம்.
தமிழர்களை அச்சத்திற்குள் தள்ளும் விடயம்
தமிழர்களின் தாயகத்தை ஆக்கிரமிக்கவும், கபளீகரம் செய்யவும் தர்மத்தின் மதமான பௌத்தத்தையே சிங்கள பௌத்தமாக்கியுள்ளதோடு புத்தரையும் சிங்கள புத்தராக்கி தமிழர்களை அச்சத்திற்குள் தள்ளியதும் பயங்கரவாதமே.
இந்நிலையில் அஹிம்சையின் தீபமான திலீபனை பயங்கரவாதியாக்குவதும், தமிழர்களை பயங்கரவாதிகளாகவே தொடர்ந்து வைத்திருக்க நினைப்பதும் யாருடைய அரசியலுக்காக? முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்துவதும், முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுப்பதும், மாவீரர்களை நினைவு கூருவதும், நாம் முகம் கொடுத்த யுத்த கால அனுபவங்களை இலக்கியமாக்கி நூல் வடிவில் ஆவணமாக்குவதும், பாடல்கள் பாடுவதும், அகிம்சை தீபத்தினை நினைவு கூர்ந்து அவ் வழியில் எம் அரசியலை முன்னெடுக்க முனைவதும் எவ்வாறு பயங்கரவாதமாகும்? தொடர்ந்தும் எங்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து ஒடுக்கி அரசியல் செய்வதே பயங்கரமாதமாகும். வடக்கு-கிழக்கு தமிழர்கள் தங்கள் தேசிய அடையாளங்களை பாதுகாத்து அரசியலில் கௌரவத்துடன் தலை நிமிர்ந்து வாழக்கூடாது என்பதுவே சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அரசியல் சித்தாந்தமாகும். அதற்காகவே அரசியல் கட்டமைப்பும் வரையப்பட்டுள்ளது.

அதுவே பயங்கரவாதம். இத்தகைய சூழ்நிலையில் அகிம்சை வழியில் ஜனநாயக வழியில் எம்மை கட்டமைத்துக் கொள்ள இடமளிக்காது தொடர்ந்தும் இலங்கை அரசாங்கம் எம்மை இன அழிப்பு செய்வதை தடுத்திட வேண்டும் எனவும் சர்வதேசத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். வடக்கு-கிழக்கு தமிழர்கள் தங்கள் அரசியல் தலைமைத்துவத்தை தேர்ந்தெடுத்து தசாப்தங்கள் கடந்துவிட்டன. அந்த அரசியல் தலைமைத்துவத்தோடு உயிர் தியாகம் ஆனவர்களுக்கு மக்கள் தங்கள் மனதிலே சிலைகளை எழுப்பி நீண்ட காலமானதன் வெளிப்பாடுதான் தியாகத் தீபம் திலீபனுக்கான சிலை.
அத்தகைய சிலையினை பொலிசார் கொண்டு சென்றதைத் தொடர்ந்து எங்கள் தேசத்தில் பால் குடிக்கும் பிள்ளைகளுடைய உள்ளத்திலும் நீங்களே திலீபனின் சிலையை உருவாக்கி விட்டீர்கள். எமது தாயக அரசியல் கட்சிகளுக்கிடையிலும், சிவில் சமூகங்களுக்கிடையிலுமான இடைவெளியை அகற்றி தேசியத்திற்காக ஒன்று சேர வேண்டும் என்ற மக்கள் குரல் நீண்டகாலமாக ஒலித்துக்கொண்டிருகையிலே தியாகி திலீபனின் சிலை அகற்றப் பட்டமை அகிம்சை தீபத்தின் முன்றலில் எம்மை ஒன்று சேர வைத்துள்ளது. திலீபனின் கனவோடு அரசியலைத் தொடர போராட்டதிற்கு அப்பால் கட்டமைப்பாக செயல்படுவதே காலத்தின் அரசியல் தேவை எனப்பட்டுள்ளது.