தமிழர் தேசமெங்கும் இன்று தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்: பிரதான நிகழ்வு யாழ். நல்லூரில்
தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு தமிழர் தாயகமெங்கும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.
இன்று (26.09.2023) பிரதான நிகழ்வு யாழ்ப்பாணம் - நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இடம்பெறவுள்ளது.
இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயர் கொண்ட திலீபன், தமிழ் மக்களின் விடுதலைக்காக இந்தியப் படைகளுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தை 1987ஆம் ஆண்டு நடத்தினார்.
செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமான உண்ணாவிரதப் போராட்டம், 12 நாட்களின் பின்னர் செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி திலீபனின் வீரச்சாவுடன் முடிவுக்கு வந்தது.
அகிம்சை வழிப் போராட்டம்
ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அகிம்சை வழிப் போராட்ட வழிகள் தோல்வியடைந்த காரணத்தால் ஆயுத வழிப்போராட்டம் ஆரம்பமானது. இந்த ஆயுதப் போராட்ட வழியில் முக்கிய இடம் வகித்தவர்களில் ஒருவரான திலீபன் ஆயுதப் போராட்டத்தை மட்டுமல்ல, அகிம்சை வழிப் போராட்டத்தையும் நடத்த முடியும் என உலகுக்கு எடுத்துக் காட்டியவர்.
யாழ்ப்பாணத்தில் ஊரெழு எனும் கிராமத்தில் ஆசிரியர் இராசையா தம்பதியினருக்கு நான்காவது கடைக்குட்டி மகனாக 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி பார்த்தீபன் பிறந்தார்.
யாழ். பல்கலைக்கழத்தில் மருத்துவபீட மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருக்கையில் விடுதலைத் தாகம் கொண்டு, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தலைவராக ஏற்று தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் திலீபன் என்ற பெயரில் அவர் சேர்ந்தார்.
ஆயுதப் போராட்டம் உச்சநிலையை அடைந்திருந்த நிலையில் சமாதானப் படை என்ற போர்வையில் இந்திய இராணுவம் தமிழ்ப் பகுதிகளில் நுழைந்தது. பின்னர் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து, தமிழர் தாயகப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் அத்துமீறல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
ஐந்து கோரிக்கைகள்
இதனைக் கண்டித்து திலீபன் 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.
1) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.
2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
3) இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல செயற்பாடுகளும் நிறுத்தப்படல் வேண்டும்.
4) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவற்படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளேயே திலீபன் முன்வைத்தார்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீரும் அருந்தப்போவதில்லை என்று அறிவித்த அவர், அந்தக் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாததால் பன்னிரண்டாம் நாள் (26.09.1987) காலை 10.58 மணிக்கு வீரமரணமடைந்தார்.
வீரகாவியம் படைத்த தியாக தீபம்
"மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!!" என்று முழக்கமிட்டு தாயக மண்ணை முத்தமிட்டு வீரகாவியம் படைத்த தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு தரணியெங்கும் இன்று உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.
பிரதான நிகழ்வு யாழ்ப்பாணம் - நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில் இடம்பெறவுள்ளது என்று திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம் இன்று காலை 7.30 மணிக்கு ஊரெழுவிலிருந்து கிட்டு பூங்கா நோக்கி ஊர்திப் பேரணி ஆரம்பமாகி தொடர்ந்து காலை 8 மணிக்குக் கிட்டு பூங்காவிலிருந்து நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் நோக்கி நடை பவனி ஆரம்பமாகும்.
அதேவேளை, தியாக தீபம் உண்ணா விரதமிருந்து உயிர்நீத்த நேரமான காலை 10.48 மணிக்கு அவர் உண்ணாவிரதமிருந்த நல்லூரின் வீதியிலும், நினைவாலயத்திலிலும் சமநேரத்தில் மாவீரர்களின் பெற்றோரால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து மலர் வணக்கம் நடைபெறும். இந்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சி பேதமின்றி அனைவரும் பங்குகொண்டு தியாக தீபத்தை நினைவேந்திடுமாறு ஏற்பாட்டுக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வுக்காக இன்று காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை பருத்தித்துறை வீதி மூடப்படும் எனவும், அந்த வழியால் பயணம் செய்பவர்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |