மூன்று அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
தடுப்பு காவலில் இருந்து நபர் ஒருவருரின் வழக்கு கோவைகளை முறைக்கேடாக கையாண்ட குற்றச்சாட்டில் வவுனியா நீதிமன்றில் கடமை புரியும் சிரேஸ்ட உத்தியோகத்தர் உட்பட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
இரு வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரின் வழக்கு கோவைகள் இரண்டினை பணத்துக்காக மோசடியான முறையில் நீதிமன்றத்தில் இருந்து எடுத்து வழங்கியமை தொடர்பில் வவுனியா விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
வழக்கு கோவை திருட்டு விவகாரம்
இதனையடுத்து, வவுனியா நீதிமன்றில் பணியாற்றும் சிரேஸ்ட உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 12ஆம் திகதி விசேட குற்றத்தடுதப்பு பிரிவு பொலிஸாரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது வழக்கு விசாரணைக்கான கோவைகள் இரண்டினை மோசடியான முறையில் நீதிமன்றத்தில் இருந்து எடுத்து கைமாற்றியமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டதுடன், குறித்த குற்றச் செயலுக்கு உடந்தையாக செயறபட்ட மேலும் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
14 நாட்களுக்கு விளக்கமறியல் உத்தரவு
பொதுச் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட மூவரும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மேலும் சில வழக்கு கோவைகளும் இவ்வாறு கைமாற்றப்பட்டமை தொடர்பான தகவல்கள் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், அது தொடர்பில் வவுனியா மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்பில் வவுனியா விசேட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை கைது செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.