பொம்மையில் மறைத்து போதைப்பொருள் கடத்தியவருக்கு விளக்கமறியல் நீடிப்பு
கரடி பொம்மைக்குள் மறைத்து வைத்து ‘ஐஸ்’ போதைப்பொருள் கடத்திய நபரை எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை (08) மாலை அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
விளக்கமறியல் நீடிப்பு
இந்த கைது நடவடிக்கை, அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எம். பிரியங்கர தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை 120 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளவும், ஏப்ரல் 13ஆம் திகதி மீண்டும் மன்றில் முன்னிலைப்படுத்தவும் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, ஏப்ரல் 13ஆம் திகதி மீண்டும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபரை, மேலும் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டதுடன், வழக்கை எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.