தனிநபர் வருமான வரியில் அதிரடி மாற்றம்! யாருக்கு எவ்வளவு வரிச் சலுகை..
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தனிநபர் வருமான வரியில் மேலும் சலுகைகளை வழங்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
இதன்படி, வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படுவதுடன், வரி அறவிடும் வருமானப் படிமுறைகளிலும் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
வரவு செலவுத் திட்ட உரை
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையின்படி, வருடாந்த தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை 1.8 மில்லியன் ரூபாவிலிருந்து 1.95 மில்லியன் ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்துள்ளார்.
இதன் மூலம் மாதாந்த வரி விலக்கு வரம்பு 150,000 ரூபாவிலிருந்து 162,500 ரூபாவாக அதிகரிக்கிறது. இதன்படி, மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் 162,500 ரூபா வரை உள்ளவர்கள் தனிநபர் வருமான வரி செலுத்தத் தேவையில்லை.
முதல் 850,000 ரூபா வருமானத்திற்கு 6வீத வரி. அடுத்த 600,000 ரூபாவிற்கு 12வீத வரி. அடுத்தடுத்த தலா 600,000 ரூபா வருமானப் பிரிவுகளுக்கு முறையே 18வீதம் 24வீதம் மற்றும் 30வீத வரி எஞ்சிய வருமானத்திற்கு அதிகபட்சமாக 36வீத வரி.
தனிநபர் வரி செலுத்துவோர்
இதன்படி, அதிகபட்சமான 36வீத வரி அறவிடப்படும் மாதாந்த வருமான எல்லை சுமார் 358,000 ரூபாவிலிருந்து 433,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த மாற்றங்களின் மூலம் தனிநபர் வரி செலுத்துவோருக்கு அவர்களின் வருமானத்தைப் பொறுத்து மாதாந்தம் 750 ரூபா முதல் 15,750 ரூபா வரை மேலதிக வரிச் சலுகை கிடைக்கும் என வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டில் வருடாந்த வரி விலக்கு வரம்பு 1.2 மில்லியன் ரூபாவிலிருந்து 1.8 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டதன் மூலம் மாதாந்தம் 3,500 ரூபா முதல் 20,500 ரூபா வரை வரிச் சலுகை வழங்கப்பட்டிருந்தது.
2025ஆம் ஆண்டு சலுகைகளுடன் 2027ஆம் ஆண்டுக்கான புதிய முன்மொழிவுகளையும் இணைத்துப் பார்க்கும்போது, தனிநபர் வரி செலுத்துவோருக்கான மொத்த மாதாந்த வரிச் சலுகை 4,250 ரூபா முதல் 36,250 ரூபா வரை அமையும் என வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.