பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல நன்மைகள்
இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்காக புதிய வர்த்தக திட்டத்தை பிரித்தானியா அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் இலங்கைக்குப் பெரும் வர்த்தக நன்மைகள் கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் மதிப்பீட்டுள்ளனர்.
பிரித்தானிய வணிகம் மற்றும் வர்த்தகத் துறை அறிவித்துள்ள இந்தத் திட்டம், ஆடைகள், உணவுப் பொருட்கள் மற்றும் விவசாய உற்பத்திகள் போன்றவற்றை வரிவிலக்காக இறக்குமதி செய்ய அனுமதிக்கின்றது.
பிரித்தானிய சந்தை
இதன் மூலம் இலங்கையை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், குறிப்பாக இத்துறைகளில் ஈடுபட்டுள்ளவர்கள், பிரித்தானிய சந்தையை இலக்காகக் கொண்டு தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த வாய்ப்பு பெறுவார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இதுவொரு முக்கிய சந்தைப் போக்கை உருவாக்கும் வாய்ப்பாகும் என பல்கலைக்கழக மேலாண்மை ஆய்வு துறை பேராசிரியர் நலின் அபேசேகர தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய ஏற்றுமதி பொருட்களுக்கு அப்பால், புதிய சிந்தனைகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இசை, சினிமா, புத்தகம் அச்சிடுதல், நாடகம் போன்ற படைப்புப் பொருளாதாரத் துறைகள் தற்போது உலகளவில் அதிக கவனம் பெறுகின்றன.
இலங்கைக்கு வாய்ப்பு
இலங்கையும் இந்த துறைகளில் புதிய சந்தைகளை அடைய முயற்சி செய்ய வேண்டும். தற்போது பிரித்தானியா, இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி இலக்காக உள்ளது. இந்த நிலையில், இந்த சந்தையை மேலும் விரிவுபடுத்துவது அவசியமாக உள்ளது.
பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள புதிய சந்தைகளை இலக்கு வைத்து கலந்துரையாடல்களை ஆரம்பிப்பது முக்கியம் என பேராசிரியர் அபேசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.