நாடளாவிய ரீதியில் விடுதலை செய்யப்பட்ட கைதிகள் (Photos)
வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய ரீதியில் 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் (05.05.2023) யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வெசாக் தினத்தினை முன்னிட்டு, ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் அடிப்படையிலேயே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். சிறு குற்றங்கள், தண்ட பணம் செலுத்த முடியாததால் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் உள்ளிட்டவர்களே இவ்வாறு விடுதலையானார்கள்.
செய்தி - தம்பித்துரை பிரதீபன்
வவுனியா
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 கைதிகள் இன்றைய தினம் (05.05.2023) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைவாக, நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறு குற்றங்களுடன் தொடர்புடையோர், தண்டப் பணம் செலுத்தாதோர், தண்டனைக் காலம் நிறைவடையும் நிலையில் இருந்தோர் என 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சமூகத்தில் நற் பிரஜைகளாக வாழ்வதற்கான அறிவுரைக் கூறி வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார் தலைமையில் சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் அவர்களுக்குக் கைலாகு கொடுத்து விடுவித்துள்ளனர்.
செய்தி - வசந்தரூபன்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 ஆண் கைதிகள் இன்றைய தினம் (05.05.2023) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வில், பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு சிறு குற்றம் புரிந்த தண்டனைப் பணம் செலுத்தாத கைதிகள் 14 பேரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - சரவணன்
திருகோணமலை
திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 கைதிகள் இன்றைய தினம் (05.05.2023) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் வசந்த குமார டேப் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் நடைபெற்றது. இதன் போது சிறுகுற்றங்கள் புரிந்த மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாத சிறைக்கைதிகளே இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் பிரதான ஜெயிலர், புனர்வாழ்வு அதிகாரிகள்,செயிலர் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
செய்தி - பாரூக் முபாரக்


















புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
