சபாநாயகருக்கு எதிரான பிரேரணை நிராகரிப்பு : எதிரணியின் வாயை மூடுவதற்கு முயலாதீர்! சஜித் சீற்றம்
சபாநாயகருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமையால் ஏற்பட்ட சிறப்புரிமை மீறல் குறித்துப் பேசுவதற்கு ஏன் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
நிலையியல் நடைமுறைகளைப் பின்பற்றியும் தனக்குச் சந்தர்ப்பம் மறுக்கப்படுகின்றது என்று சுட்டிக்காட்டிய அவர், எதிர்க்கட்சியின் குரலை நசுக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிறப்புரிமைப் பிரச்சினை
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
நிலையியல் கட்டளைகள் 29(1), (2) ஆகிய பிரிவுகளின் கீழ் சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை தயாரித்து அதனைச் சபாநாயகரிடமும் பிரதி சபாநாயகரிடமும் கையளித்தேன்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரையாற்றுவதற்கும் பிரேரணைகளை முன்வைப்பதற்குமான உரிமை தொடர்பிலேயே இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்புரிமைப் பிரச்சினையைக் கையளிப்பதற்காகக் காலை 9.15 மணிக்குச் சபாநாயகர் அலுவலகத்துக்கு வருமாறு எனக்கு அறிவிக்கப்பட்டது.

எனினும், குறிப்பிட்ட நேரத்தில் சபாநாயகரோ அல்லது பிரதி சபாநாயகரோ தமது அலுவலக அறைகளில் இருக்கவில்லை. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதைச் சபாநாயகரே நிராகரித்தமையால் ஏற்பட்ட சிறப்புரிமை மீறல் குறித்தே நான் பேச விளைகின்றேன்.
எனவே, இப்போதாவது இந்தச் சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்புவதற்கு எனக்குச் சந்தர்ப்பம் தாருங்கள். சபாநாயகர் என்ற வகையில் நிலையியல் கட்டளைகளை மீறாது செயற்படுமாறு பிரதி சபாநாயகரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.
எதிர்க்கட்சியின் வாய்களை மூட முற்படாமல், சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைக்க எமக்கு உரிய வாய்ப்பை வழங்கிடுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.