இலங்கைக்கு வழங்கிய கடனை மறுசீரமைக்க மறுக்கும் சீனா
இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள பிரதான தரப்பினருடன் இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாததன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை உடனடியான கடன் வசதிகளை பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள பிரதான இரண்டு தரப்பு இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளாகும். இலங்கைக்கு உடனடியான நிவாரணங்களை வழங்குமாறு இந்தியா ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் சீனா, இலங்கைக்கு தான் வழங்கியுள்ள கடனை மறுசீரமைப்பு செய்ய இதுவரை இணக்கத்தை வெளியிடவில்லை. வொஷிங்டனில் கடந்த 18 ஆம் திகதி நிதியமைச்சர் அலி சப்றி தலைமையிலான இலங்கையின் பிரதிநிதிகள், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுடன் பேச்சுாவார்த்தைகளை ஆரம்பித்தனர்.
இதன் போது பிரதான கடன் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வரை இலங்கைக்கு உடனடியான கடன் உதவியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
உடனடியான கடன் உதவியை பெற வேண்டுமாயின் இலங்கை இதுவரை பெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடன் வழங்கிய தரப்பினருடன் ஏற்றுக்கொள்ளக் கூடிய வேலைத்திட்டத்தை முதலில் உருவாக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் பிரதான நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது.
கடன் மறுசீரமைப்புக்கு இலங்கைக்கு கடன் வழங்கிய பிரதான தரப்பினர் இணங்க வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இந்த நிபந்தனை தொடர்பான சீனா இதுவரை சாதகமான பதில் எதனையும் வழங்கவில்லை என்பதுடன் தமது கடனை மறுசீரமைப்பதற்கு பதிலாக பெற்ற கடனை திரும்ப செலுத்த புதிய கடனை வழங்க மாத்திரம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கடந்த 21 ஆம் திகதி இலங்கைக்கான சீனத் தூதுவரை சந்தித்து, இலங்கையின் கடனை மறுசீரமைப்பு செய்து தரும்படி விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் சீனத் தூதுவர் இதற்கு சாதகமான பதிலை வழங்கவில்லை. இந்த நிலையில், இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் உதவியை பெற இன்னும் ஆறு மாத காலம் வரை செல்லும் என வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கடன் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டத்தை இன்னும் 20 நாட்களுக்குள் உருவாக்க உள்ளதாக நிதியமைச்சர், வொஷிங்டனில் கூறியிருந்தார்.