வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கான வாக்கெடுப்பு நாளை!
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கான தேர்தல் நாளைய தினம் (05) காலை இடம்பெறவுள்ளது.
கடந்தமுறை இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ்பி்ரதேச சபை மற்றும் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் ஆட்சியினை தமிழ் தேசியகூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது.
அதற்கமைய சபையின் தவிசாளர் பதவியினை ஆட்சி காலப்பகுதியில் இரண்டரை வருடங்கள் என பங்கிட்டு வகிப்பதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிளட் மற்றும் ரெலோ கட்சிகளிற்கிடையில் புரிந்துணர்வு ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.
அதற்கமைய வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராயசிங்கம் மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர்கள் தமது பதவியினை ராயினாமா செய்திருந்தனர்.
அந்தவகையில் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வவுனியா தெற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கான தேர்தல் நாளையதினம் இடம்பெறவுள்ளது.
குறித்த தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு சார்பில் பிளட்டின் யோகராயாவின் பெயர் பரிந்துரைக்கப்படவுள்ளதுடன், ஈபிடிபி சார்பில் து.விக்டரும், சிறிரெலோ சார்பில் அதிஸ்ட செல்வமும், சுதந்திரக்கட்சி சார்பில் வே. மகேந்திரனும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் மொத்தமாக 30 உறுப்பினர்கள் அங்கம்
வகிப்பதுடன் அதிகபட்சமாக, தமிழ் கூட்டமைப்பு 11 உறுப்பினர்களை கொண்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.