இயக்கச்சி மண்ணில் 150 ஏக்கர் பரப்பளவில் புலம்பெயர் ஈழத்தமிழனின் பிரமாண்டமான படைப்பு (Video)
தமிழ் கலாசாரம் இல்லாமல் தமிழர்கள் இல்லை. இந்தக் கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் எமது அனைத்து செயற்பாடுகளிலும் திட்டங்களிலும் அவை பிரதிபலிக்க வேண்டும்.
அவ்வாறு தமிழர் பகுதியில் அமைந்துள்ள மிக அழகான ஓர் சுற்றுலாதலமே றீ(ச்)ஷா பண்ணை [Reecha Organic Farm].
வெறுமன தமிழர் பகுதியில் அமைந்துள்ள பெயரவிலான சுற்றுலாத்தலமாக மாத்திரம் அமைந்துவிடாது, இக்காலச் சூழலில் தமிழையும் கலையையும் தடையின்றி நம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் இடமாகவும் றீ(ச்)ஷா பண்ணை [Reecha Organic Farm] அமைந்துள்ளது.
சுற்றுலாதலம்
கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மிக அழகான ஓர் சுற்றுலாதலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும்.
றீ(ச்)ஷா பண்ணை பல ஆயிரக்கணக்கிலான தென்னை மரங்கள் சூழ மிக அழகாக காட்சியளிக்கும் பண்ணையாகும்.
இப் பண்ணை சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்கு தமிழுக்கும் தமிழர் வரலாற்றுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் அளப்பறியது.
இங்கே ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு தமிழ் மன்னனின் கோட்டையாகக் கருதி, பெயரிட்டு, குறித்த மன்னர்களின் உருவப்படங்களைப் பொறித்து, அவர்கள் குறித்த ஒரு சிறுகுறிப்பும் இங்கு எழுதப்பட்டுள்ளது.
எமது சிறார்களின் மனங்கவர்ந்த இடமாக உள்ள இந்த றீ(ச்)ஷா பண்ணையில் அங்குள்ள மிக பிரமாண்டமான தமிழ் மன்னர்களின் உருவப்படங்களை காட்டி ‘குளக்கோட்ட மன்னன் பல குளங்களைக் கட்டி விவசாயத்தை பெருக்கினார்’என்றும் ‘பண்டாரவன்னியன் வீரத்தில் சிறந்தவர். அவர் போர்த்துக்கேயரை எதிர்த்து போரிட்டார்’ என்றும் அறிமுகம் செய்யும்போது அதில் பெருமையும் உரிமையும் இருக்கும். பிள்ளைகளுக்கும் அது மிகவும் பிடிக்கும்.
இங்குள்ள கல்விமுறையின் அடிப்படையே பிள்ளைகளுக்கு நாட்டுப்பற்றையும் வரலாற்றையும் புகுத்துவதுதான் இந்த றீ(ச்)ஷா பண்ணயின் நோக்கமாக அமைந்துள்ளது.
பூங்காக்களிலும் தெருக்களிலும் மற்றும் திரும்பும் திசை எல்லாம் சிலைகளையும் நினைவிடங்களையும் நிறுவி, வரலாற்று நாயகர்கள் அனைவரையும் பிள்ளைகள் மனதில் பதித்துவிடும் உயரிய பணியை எமது றீ(ச்)ஷா பண்ணை செய்து வருகின்றது.
இந்த உயரி முயற்சியை, தமிழ் சார்ந்து ReeCha முன்னெடுப்பது பெருமைக்கும் போற்றுதலுக்குரிய விடயமாகும்.
தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி, உல்லாசப் பயணிகளாக வரும் வெளிநாட்டவர்களையும் இந்த முயற்சி ஆச்சரியப்படுத்தும். இது எமது தமிழரின் பெருமையை உலகறிய செய்யும் முயற்சியாகவும் அமைகின்றது.
எமது றீ(ச்)ஷா பண்ணையில் ஆடு, மாடு, கோழி, பன்றி என ஆயிரக்கணக்கான விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் மற்றும் பல்வேறு பயன்தரு மரங்கள், தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.
ஹோட்டல்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரத்திலான உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், சிறுவர் விளையாட்டுத்திடல்கள், நீச்சல் தடாகங்கள் என அத்துனை வசதிகளும் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இங்கு 200 வரையான ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். மேலும் பல்வேறு ஒப்பந்த நிறுவனங்கள் உள்ளே பல்வேறு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஒரு பின்தங்கிய கிராமத்தில், சர்வதேச தரத்தில் ஒரு பண்ணையை அமைத்து, அதில் பலநூறுபேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி பலரது வாழ்வாதாரமும் உயர்த்தப்படுகின்றது.
தமிழர் பகுதியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணை தமிழர்களின் வரலாறு பேசும் ஓர் பிரமாண்மான சுற்றுலாத்தலமாகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
புலம்பெயர் தமிழர் ஒருவரால் இப்படி ஒரு சாதனையை செய்ய முடியும் என்றால் ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களும் நினைத்தால் எத்தனை சாதனைகளை தமிழர் பகுதியில் நிலை நாட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக றீ(ச்)ஷா பண்ணை திகழ்கின்றது.