கைது செய்யப்பட்டுள்ள ஷிரந்தி! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்பட்டார்..
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியும், முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ச, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, அவ்வலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கிருலப்பனை, பூர்வராம வீதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, இன்று (07) காலை அதிகாரிகளால் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.
அவரிடம் சுமார் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
'சிறிலியா சவிய' நிதியத்துடன் தொடர்புடைய கணக்கு ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பரிவர்த்தனைகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச சற்று முன்னர் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷிரந்தியிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று (07.10.2026) காலை ஆணைக்குழு அதிகாரிகள் சென்றிருந்தனர்.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது தங்கியிருக்கும் கிருலப்பனையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச இன்று (7) காலை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு வங்கி ஒன்றிலிருந்து 10 மில்லியன் ரூபாயைப் பெற்றுக் கொண்டதாகவும், அதனைத் தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் பொதுச் சொத்துச் சட்டம் மற்றும் ஊழல் தொடர்பான சட்ட விதிகளின் கீழ் குற்றங்களை இழைத்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
கிருலப்பனையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூரில் இருந்த ஷிரந்தி ராஜபக்ச மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து மலேசியா எயார்லைன்ஸ் விமானம் மூலம் நேற்று முன் தினம் இரவு (05) நாட்டை வந்தடைந்தார்.
நாடு திரும்பிய ஷிரந்தி
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தி வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க, கடந்த செப்டம்பர் 24ஆம் திகதி அவர் அழைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 16ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் புறப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் நேற்றுமுன் தினம் இரவு நாடு திரும்பியுள்ளதுடன், தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்பிணை மனுவொன்றை தனது சட்டத்தரணிகள் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இவ்வாறான சூழலில் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.