உலக முத்தமிழ் மாநாட்டில் சிறப்பு விருது பெறவுள்ள காயத்ரி விக்ரமசிங்க
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் காயத்ரி விக்ரமசிங்க, மலேசியாவில் இடம்பெறவுள்ள உலக முத்தமிழ் மாநாட்டில் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.
உலக தமிழ் சங்கமம், சென்னை தமிழ் சங்கம், மலேசியா தமிழ் சங்கம் ஆகியன இணைந்து எதிர்வரும் 10 - 14ஆம் திகதிகளில் மலேசியாவில் உலக முத்தமிழ் மாநாட்டை நடத்தவுள்ளன.
இதன்போது, கடந்த 2018 தொடக்கம் 2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையின் வடக்கு தொகுதியின் உறுப்பினராக இருந்த காயத்ரி விக்ரமசிங்க ஆற்றிய சமூகப் பணிகளை கௌரவிக்கும் முகமாக இந்த விருது வழங்கி அவர் கௌரவிக்கப்படவுள்ளார்.
பல்வேறு தடைகளுக்கு மத்தியில்
கொழும்பு மாநகர சபையில் சிங்கள மொழியில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த விண்ணப்ப படிவங்களில் தமிழ் மொழிபெயர்ப்பையும் இணைத்த பெருமைக்குரியவர் காயத்ரி.
மாநகர சபை எல்லைக்குள் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குழந்தைகளுக்கு 12 முன்பள்ளி பாடசாலைகள் பல ஆண்டுகளாக சிங்கள மொழியில் மட்டுமே இயங்கி வருகின்றன.
தமிழ் மொழி மூலம் முன்பள்ளி பாடசாலையில் ஆரம்பிக்க வேண்டும் என்ற செயல்திட்டத்தை சபையில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்று தனது (லுனுபொக்குன) வட்டாரத்தில் தமிழ் மொழி மூலமான முதலாவது முன்பள்ளி பாடசாலையை பல்வேறு தடைகளையும் மீறி தனது பதவி காலத்திற்குள் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் ஆரம்பித்த வைத்த பெருமைக்குரியவர்.
கலைஒளி முத்ததையாபிள்ளை அறக்கட்டளை வெளியீட்டு வரும் நூலாக்க முயற்சிகளில் தனது முழு பங்களிப்பையும் வழங்குபவர்.
தமிழ் ஆசிரியர்களுடன் 20 மாணவர்கள்
தற்போது இரண்டு தமிழ் ஆசிரியர்களுடன் 20 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் கொழும்பு 15 புனித என்ருஸ் மேல் வீதியில் நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் கற்றல் உபகரணங்கள், பாதணிகளை திட்டமிட்டு வசதி குறைந்த மாணவர்களுக்கு வழங்கியவர்.
இவரது அரசியல் சமூக தமிழ் பணிகளை, தமிழ் மொழி மூலம் பாடசாலையை ஆரம்பித்ததை கௌரவிக்கும் முகமாக, உலக முத்தமிழ் மாநாட்டில் தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலன் மற்றும் அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மலேசிய அரசு டிஜிட்டல் துறை அமைச்சர் கோபின்ட் சிங் டியோ, மலேசிய அரசு சட்டம் & நிறுவன சீர்திருத்தம் அமைச்சர் M.குலசேகரன், மலேசிய அரசு மனிதவளத்துறை அமைச்சர் ரமணன் ராமகிருஷணன், சென்னை தமிழ்ச் சங்கம் & தலைவர், உலகத் தமிழ்ச் சங்கமம் முனைவர். தியாக.இளங்கோவன், செயல் தலைவர், உலகத் தமிழ்ச் சங்கமம், மலேசியா இரா. மாணிக்கம் ஆகியோர் இவ்விருதை வழங்கி கௌரவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |