டக்ளஸின் கைதுக்கு விடுதலைப் புலிகளை காரணம் காட்டும் நாமல்
புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களை திருப்திப்படுத்தவே டக்ளஸ், பிள்ளையான் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது,
தமிழ் தலைமைகள் கைது
விடுதலைப்புலிகளுக்கு எதிராகப் போராடி, ஜனநாயக வழியில் அரசியலுக்கு வந்தவர் தான் டக்ளஸ் தேவானந்தா. மக்களின் வாக்குகள் மூலம் நாடாளுமன்றத்துக்கு வந்து, மக்களுக்கு வந்து சேவையாற்றியுள்ளார்.

இவ்வாறு இருக்கையில், தற்போது அவரைக் கைது செய்தமை அவசியமற்றது. புலம்பெயர் விடுதலைப் புலி உறுப்பினர்களை திருப்திப்படுத்தவே பிள்ளையானும், டக்ளஸூம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட துப்பாக்கி தொடர்பில் டக்ளஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அப்படியானால் இது தொடர்பில் ஏன் இவ்வளவு நாட்கள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
எனவே, அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தான் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.