நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை: கிட்ணன் செல்வராஜ் எம்.பி தெரிவிப்பு
உள்நாட்டு உற்பத்திகளை ஏற்றுமதிப் பொருட்களாக மாற்றி, அந்நியச் செலாவணியை அதிகரிப்பதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே ஏற்றுமதி விவசாயத் தொழில் ஊக்குவிப்பு திருத்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி விவசாயத் தொழில் ஊக்குவிப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதும், அவற்றை ஏற்றுமதிச் சந்தைக்கு கொண்டு செல்வதன் மூலம் அமெரிக்க டொலர் வருமானத்தை உயர்த்துவதும் அவசியமானது.
தொடர்ச்சியான வீழ்ச்சி
2030ஆம் ஆண்டளவில் வறுமையை ஒழிப்பதை இலக்காகக் கொண்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி வருமானத்தை 30 சதவீதம் வரை உயர்த்துவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இலங்கையின் பாரம்பரிய ஏற்றுமதிப் பொருட்களான தேயிலை, தென்னை மற்றும் இறப்பர் ஆகிய துறைகளில், குறிப்பாக தேயிலை உற்பத்தியில் தொடர்ச்சியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை குறித்து சுட்டிக்காட்டினார்.