வரி ஏய்ப்பு செய்வோருக்கு வலைவீசும் அரசாங்கம் : TIN நடைமுறையின் பின்னணி
நாட்டில் வரி ஏய்ப்பு செய்வோரை வலைக்குள் கொண்டு வரும் நோக்கில் புதிய வருமான வரி நடைமுறை அறிமுகம் செய்யவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது ராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் வருமான வரி செலுத்தக்கூடியவர்கள் 10 இலட்சம் பேர் உள்ளனர். அவர்களில் 05 இலட்சம் பேர் மட்டுமே வரி செலுத்தி வருகின்றனர். இதனால் மறைமுக வரியை குறைக்கவும், நேரடி வரியை அதிகரிக்கவும், வரி ஏய்ப்பு செய்யும் சுமார் 05 இலட்சம் பேரையும் வரி வலைக்குள் கொண்டு வர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
TIN வரி இலக்கம்
வரி செலுத்துபவர் ஒரு நாட்டில் ஸ்திரத்தன்மையை அடைந்த பலம் வாய்ந்த குடிமகன் என்றும், அது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய எண்ணத்தை மக்கள் மத்தியில் கொண்டு கொண்டுவருவது நாட்டின் அபிவிருத்திக்கு உதவும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
பெப்ரவரி முதல் திகதியில் இருந்து TIN இலக்கத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது அதனைப் பதிவு செய்வதில் சிக்கல்கள் உள்ளன. மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக உள்ளதால் தான் அந்தப் பிரச்சினைகள் தோன்றியுள்ளன.
எனவே பிரதேச செயலக மட்டத்தில் அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஆலோசித்து வருகிறோம். அதனை ஒன்லைன் முறை மூலம் செயற்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.