வடக்கு ஆளுநருக்கும் ரவிகரன் எம்.பிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (31) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் விவசாயிகள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
விவசாயிகள் எதிர்நோக்கும் சிக்கல்
அத்துடன், ரவிகரன் முன்வைத்த நெல் உலரவிடும் இயந்திரப்பொறியை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெறுவது தொடர்பான கோரிக்கைக்கு ஆளுநர் வேதநாயகன் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டிருப்பதாவது, வெள்ள அனர்த்தம் காரணமாக ஏற்பட்டுள்ள நெல் அழிவுகளுக்குரிய இழப்பீடுகள் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கப்படுதல், நெல்லுக்கான விலையை நிர்ணயித்தல், நெல் சந்தைப்படுத்தலில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்தல், காட்டுயானைகளால் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக ரவிகரனால் நாகலிங்கம் வேதநாயகனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அத்தோடு நெல் உலரவிடுதலில் விவசாயிகள் எதிர்நோக்கும் சிக்கல்நிலமைகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் போதியளவு நெல் உலரவிடும் தளங்களோ, நெல் உலரவிடும் இயந்திரப் பொறித்தொகுதிகளோ இன்மையால் விவசாயிகள் பிரதான வீதிகளை நெல் உலரவிடும்தளங்களாக பயன்படுத்தும் அவலநிலை தொடர்பிலும், அவற்றால் ஏற்படும் சிக்கல்நிலைதொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது ஆளுநரிடம் சுட்டிக்காட்டினார்.
எனவே முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் நெல் உலரவிடுதலில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்கும்நோக்கில் நெல்உலரவைக்கும் இயந்திரப் பொறித்தொகுதிஒன்றினை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெற்றுத்தருமாறு நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
நெல் உலரவிடும் பொறி
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர்பிரிவில் கூழாமுறிப்புப் பகுதியில் சுமார் ஒரு இலட்சம் நெல்மூட்டைகளை களஞ்சியப்படுத்திவைக்கக்கூடிய நெல்களஞ்சியசாலை ஒன்று கடந்தகாலத்தில் உலகவங்கியின் நிதிஉதவியில் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே அந்த நெற்களஞ்சியசாலைக்கு நெல் உலரவிடும் இயந்திரப் பொறியினை வழங்கினால், இலகுவாக நெல்லினை உலரவைப்பதுடன், களஞ்சியப்படுத்தவும் முடியுமென்ற ஆலோசனையும் நாடாளுமன்ற உறுப்பினரால் ஆளுநர் வேதநாயகனிடம் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் விவசாயிகளின் நன்மைகருதி முன்வைத்த நெல் உலரவைக்கும் இயந்திரப்பொறித் தொகுதியை முல்லைத்தீவிற்கு பெறுவது தொடர்பான கோரிக்கையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
குறித்த நெல் உலரவிடும் பொறித்தொகுதியை முல்லைத்தீவிற்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஆளுநர் இதன்போது தெரிவித்திருந்தார்.
மேலும் இந்தச் சந்திப்பில் முல்லைத்தீவுமாவட்ட கமக்காரஅமைப்புகளின் அதிகாரசபையின் தலைவர் பென்னம்பலம் சத்தியமூர்த்தி, உபதலைவர் இ.வேதநாதன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |