ஷானி அபேசேகர - ரவி செனவிரத்ன ஆகியோரின் அடிப்படை உரிமை மீறல்! இழப்பீடு செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் தற்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்குத் தொடர்பிருப்பதாக ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன அளித்த புகாரின் பேரில், தேசபந்து தென்னக்கோனின் உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அப்போதைய தலைமைப் பொலிஸ் பரிசோதகர் இந்துக்க டி சில்வா, ஷானி அபேசேகரா மற்றும் ரவி செனவிரத்னவுக்கு எதிராக விசாரணையொன்றை முன்னெடுத்திருந்தார்.
அடிப்படை உரிமை மனு தாக்கல்

குறித்த விசாரணைகளின் அப்படிடையில் தங்களை சட்டவிரோதமாகக் கைது செய்யும் நோக்கம் இருப்பதால் அதற்குத் தடை விதிக்கக் கோரி, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்த பின்னர் உயர் நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, இது தொடர்பான புகாரைத் தாக்கல் செய்த ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன, தலா 50,000 ரூபாவும், இது தொடர்பான விசாரணையை நடத்திய அப்போதைய தலைமைப் பொலிஸ் பரிசோதகர் இந்துக்க டி சில்வா, தலா 10,000 ரூபாவும் ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு வழங்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.