இன்று முதல் வானில் தோன்றும் அரிய நிகழ்வு
வானில் ஒரே நேர்க்கோட்டில் 6 கோள்கள் தென்படும் அரிய நிகழ்வை இன்று முதல் 25ஆம் திகதிவரை காணலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும் சூரியனை சுற்றி வரும் நிலையில், பூமி ஒருமுறை சூரியனை சுற்றிவர 365 நாட்கள் எடுக்கின்றது.
இந்த வகையில் கோள்களின் சுற்றுவட்டப் பாதையில் ஒன்றை ஒன்று சந்திக்கும் அபூர்வ நிகழ்வுகள் அவ்வப்போது ஏற்படுவது உண்டு.
அரிய நிகழ்வு
பொதுவாக 3 அல்லது 4 கோள்களை ஒரே நேர்கோட்டில் காணக்கூடிய வாய்ப்பு ஏற்படும். ஆனால் 5 அல்லது 5இற்கும் மேற்பட்ட கோள்கள் வருவது அரிதான ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று முதல் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 6 கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வர உள்ளன. சூரியன் மறைந்த பின் இரவில் இதனை காண முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ஆகிய கிரகங்களை நாம் வெறும் கண்ணால் பாா்க்கலாம். யுரேனஸ் மற்றும் நெப்டியூனானது பூமியைவிட்டு தொலைவில் இருப்பதால் அதனை வெறும் கண்களால் பார்க்க முடியாது எனவும், தொலைநோக்கியின் உதவியுடன் பார்க்கலாம் எனவும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சூரியப் பாதை
இது குறித்து விஞ்ஞானிகள் மேலும் தெரிவிக்கையில்,
“நமது சூரியப் பாதையில் ஒவ்வொரு கோளும் பல நூறு கோடி கிலோ மீட்டர் தூரத்திலும், வெவ்வேறு சாய்வு கோணத்திலும் சுற்றி வருவதால் அவை எப்போதும் ஒரே நேர்கோட்டில் வருவதற்கு வாய்ப்பில்லை. எனவே, இவ்வாறு ஒரே வரிசையிலும் ஒரே நேர்கோட்டிலும் அணிவகுத்து வருவது மிக அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
அதேநேரம், கோள்கள் ஒரே நேர்கோட்டில் காணப்படவில்லை. மாறாக பூமியில் இருந்து பார்க்கும்போது இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை நமக்கு தருகிறது.
இதனை காற்று மற்றும் ஒளி மாசுபாடு இல்லாத, அடிவானம் மறைக்காத சற்று உயரமான இடத்தில் அமர்ந்துகொண்டு பார்ப்பது மிகவும் சிறந்தது. செவ்வாய், சனி வெறும் கண்ணுக்கு மங்கலாக தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |