கிளிநொச்சி, முல்லைத்தீவில் துரித கதியில் அகற்றப்படும் அபாயக வெடிபொருட்கள்
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2024 பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 38,348 அபாயகரமான வெடிபொருட்களை துரித கதியில் அகற்றியுள்ளதாக பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மனித நேய கண்ணி வெடியகற்றும் பணிகளை முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் தொடர்பில் நேற்று (26-02-2024) ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
எதிர்கால திட்டங்கள்
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இலங்கையின் வடக்கு பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் அரச சார்பற்ற நிறுவனத்திற்கு இலங்கைக்கான ஜப்பானிய தூதரக பிரதிநிதி மறிக்கோ மற்றும் ஜனனி கந்தையா ஆகியோர் கடந்த வாரம் வருகை தந்தனர்.
இந்நிலையில், நிறுவன அலுவலகம் மற்றும் முகமாலையில் கண்ணிவெடியகற்றி கையளிக்கப்பட்ட பிரதேசங்கள் என்பவற்றை மேற்பார்வையிட்டார்.
இதன் போது கண்ணிவெடியகற்றப்பட்டு கையளிக்கப்பட்ட பிரதேசங்கள், தற்போது அகற்றப்படும் பிரதேசங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
வெடிபொருட்கள்
2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2024 பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள தச்சடம்பன் அம்பகாமம் ஒழுமடு மற்றும் மாங்குளம் பகுதியிலும் ,புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மேற்கு கிழக்கு உடையார்கட்டு மற்றும் சுதந்திரபுரம் பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை இயக்கச்சி மற்றும் ஆனையிறவிலும் அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளது.
மேலும், கண்ணிவெடியகற்றும் பணிகளை புதுக்குடியிருப்பு மாங்குளம் மற்றும் ஆனையிறவிலும் துரித கதியில் முன்னெடுக்கப்படுகிறது.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |