இலங்கை மக்களின் வாழ்க்கை செலவு 70 ஆயிரம் ரூபா வரை அதிகரிப்பு! நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்
இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பமொன்றுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாதாந்தம் 64 ஆயிரம் ரூபா முதல் 70 ஆயிரம் ரூபா வரை தேவைப்படுவதாகவும், தொழில் செய்வோரும் உணவு உண்ண முடியாத நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதார நெருக்கடியை முன்னிலைப்படுத்தி, மக்கள் கோரும் அரசியல் கலாசார மறுசீரமைப்பை புறக்கணித்து தற்போதைய ஆட்சியாளர்கள் செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நெருக்கடி ஏற்பட்டமைக்கான காரணம்
சிறந்த முறையில் ஆட்சி செய்யப்பட்ட நாடு, சிறந்த பயணத்தை முன்னெடுத்த நாடு திடீரென ஏதோ ஒன்று ஏற்பட்டு வீழ்ச்சி அடைந்துவிட்டதாகவே இங்கு விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் இந்த நெருக்கடி அவ்வாறு ஏற்படவில்லை என்பது எம் அனைவருக்கும் தெரியும்.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் கடந்த 74 ஆண்டுகளாக படிப்படியாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. இது அழிவடைந்த நாடு அல்ல. அழிக்கப்பட்ட நாடு. இந்த நாட்டை யார் அழித்தார்கள் என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
இந்த நாட்டை அழித்தவர்கள், அதற்கான பொறுப்பை ஏற்பார்கள் ஆயின், தாம் மேற்கொண்ட தீர்மானம் தவறு என இணங்குவார்கள் ஆயின், அதற்காக அவர்கள் என்ன செய்கின்றார்கள்?
அவர்கள் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பார்கள் ஆயின் இந்த பிரச்சினையை தோற்றுவித்தவர்கள் ஆயின், அவர்கள் தீர்வை முன்வைப்பது, அதுவே தற்போது இருக்கும் பாரிய பிரச்சினை.அதன்காரணமாகவே இந்த நாடாளுமன்றத்தையும் ஆட்சியளார்களையும் மக்கள் தொடர்ச்சியாக நிராகரிக்கின்றனர்.
இரண்டு மாதங்களில் மாற்றப்பட்டுள்ள நிலைப்பாடு
இந்தப் பிரச்சினையை ஏற்படுத்தியவர்கள், தற்போது மரணித்து மீண்டெழுந்ததை போன்று தீர்வு யோசனைகளை முன்வைக்க முயற்சிக்கின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் நியாயப்படுத்திய அனைத்து கொள்கைகளையும் இன்று தவறென கூறுகின்றனர். எவ்வாறு இவர்கள் இரண்டு மாதங்களில் நிலைப்பாட்டை மாற்றுகின்றனர்.
தற்போது அரசியலமைப்பு மறுசீரமைப்பு குறித்து பேசப்படுகின்றது. எனினும் இந்த மறுசீரமைப்புக்களை யாருக்காக செய்வதென்பதை அனைவரும் மறந்துவிட்டனர். இன்று உணவு பணவீக்கம் 57.4 ஆக உயர்வடைந்துள்ளது.
மிகவும் அடிப்படையான தேவைகளை நிறைவேற்றுவதற்கு நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு 64 ஆயிரம் ரூபா முதல் 70 ஆயிரம் ரூபா வரை தேவைப்படுகின்றது.
இறைச்சி, மீன், முட்டை, சீனி, பால் போன்ற எந்தவொன்றும் இல்லாமல், மிகவும் குறைந்த பட்சமாக உயிர்வாழ்வதற்கானவற்றை பெற்றுக்கொள்வதற்கு 64 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை தேவைப்படுகின்றது.
வருமானமின்றி தவிக்கும் மக்கள்
இந்த நாட்டில் உள்ள 60 தொடக்கம் 65 வீதமான மக்களுக்கு இந்த அளவு வருமானம் கிடைப்பதில்லை.தொழில் செய்பவர்களுக்கும் இவ்வாறான வருமானம் கிடைப்பதில்லை.
தொழில் இன்றி உள்ளவர்கள் மாத்திரம் உணவு உண்ண முடியாத நிலையை எதிர்நோக்கவில்லை. தொழில் செய்யும் மக்களும் இந்தப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த 74 ஆண்டுகளாக பின்பற்றிய கொள்கைகளின் விளைவுகளையே நாம் இன்று அனுபவிக்கின்றோம். அந்த கொள்கைகளை நாம் சரிசெய்ய வேண்டுமாயின், ஜனநாயக மற்றும் மக்கள் சார்பில் சிந்திக்கும் மக்கள் தெரிவுசெய்யக் கூடிய ஆட்சியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
அதன் ஊடாக தற்பொது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தீர்க்காமல். தற்போது நாம் துன்பத்தை அனுபவிக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.
பொருளாதார நெருக்கடிக்கு முன்னுரிமை
பொருளாதார நெருக்கடிக்கு முன்னுரிமை வழங்கி, அரசியல் நெருக்கடியை மூடி மறைக்க வேண்டாம் என்பதையே நாம் கோருகின்றோம்.பொருளாதார நெருக்கடியின் அச்சமான சூழ்நிலையை காட்டி, அரசியல் ரீதியாக தலையீடு செய்ய வேண்டும் என அனைவருக்கும் யோசனை முன்வைக்கப்படுகின்றது.
மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் கலாசார மறுசீரமைப்பை ஒருபுறம்வைத்துவிட்டு அனைவரும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வை பெறுவதற்கு ஒன்றிணையுமாறு தொடர்ச்சியாக யோசனை முன்வைக்கப்படுகின்றது.
அரசியலமைப்பு நெருக்கடியை தீர்ப்பதன் ஊடாகவே தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையை தீர்க்க முடியும் என நினைவுபடுத்துகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.