ரணிலுடன் இணையும் மகிந்தவின் சகாக்கள்
பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைவார்கள் என்பது உறுதி என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு விட்டோம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நிர்வாகத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் தற்போது தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தலுக்கு எதிராக போர் கொடி உயர்த்துகிறார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நிர்வாகத்தை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டார்களாயின் தாராளமாக தேர்தலை நடத்தலாம் தானே.
கட்சியின் கொள்கைகளை நாங்கள் மீறவில்லை
2024 ஆம் ஆண்டு தேர்தல் வருடம் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் மாகாண சபைத் தேர்தல்,உள்ளூராட்சி மன்றத் தேர்தலை போன்று ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.
தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம். ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை அரசியல் சூழ்ச்சிகளினால் பிற்போட்டால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். வரலாற்றில் பல விளைவுகள் பதிவாகியுள்ளன.
கட்சியின் கொள்கைக்கு எதிராக நாங்கள் செயற்பட்டுள்ளதாகவும் எமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது.
பொதுஜன பெரமுன கட்சியின் அடிப்படை கொள்கைக்கும், கட்சி யாப்புக்கு எதிராக செயற்படும் போது அதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்பதற்காகவே கட்சியில் இருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுகிறோம்.
எமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக சாகர காரியவசம் கடந்த ஒரு வருட காலமாக குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. கட்சியின் கொள்கைகளை நாங்கள் மீறவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்த பொதுஜன பெரமுனவின் 134 உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாகர காரியவசத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் பொதுஜன பெரமுன ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடிபணிந்துள்ளது.
பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணைவார்கள் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |