பலப்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் வன்னி கூட்டுப்படை தலைமையகத்தில் ஜனாதிபதி (Video)
ஜனாதிபதி அலுவலகத்தின் வடக்கு மாகாண அபிவிருத்தி விசேட பிரிவு உப அலுவலகம் வவுனியாவில் இன்று (19.11.2022) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத வீதியில் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதுடன், குறித்த அலுவலகத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.இளங்கோபன் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அலுவலகம் திறந்து வைப்பு
போரால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தி நடவடிக்கைளையும், மக்களது பிரச்சினைகளையும் விரைவாக தீர்க்கும் பொருட்டு ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் குறித்த அலுவலகம் செயற்படவுள்ளது.
இதன்போது, வவுனியா ஓமந்தை அரச வீட்டுத்திட்ட பயனாளிகள் 32 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், போரால் பாதிக்கப்பட்ட 12 பேருக்கு இழப்பீடுகளும், 10 விவசாயிகளுக்கு மானிய உரமும் ஜனாதிபதி உள்ளிட்ட அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை கடற்தொழில் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா, கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஆகியோர் நேரில் சென்று வரவேற்று அழைத்து
வந்துள்ளனர்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச உயர்மட்ட அதிகாரிகளுடன் விசேட கூட்டம் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த கூட்டத்திற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
வவுனியா மாவட்ட செயலகத்துக்கு இன்று (19.11.2022) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அங்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும், பொலிஸாருக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கமைய அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மற்றும் இணைப்பு காரியாலயம் திறந்து வைப்பு
போன்ற பல நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், வெடிகுண்டு தகர்ப்பு பாதுகாப்பு பிரிவினர், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் உள்ளிட்டோர் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர்.
ஒரு தாய் மக்களாக ஒரே அணியாக சேர முடியும்
75 ஆவது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகின்ற போது ஒரு தாய் மக்களாக, ஒரே அணியாக சேர முடியும் என நம்புகின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு அபிவிருத்திக்கான விசேட அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு அபிவிருத்திக்கான அலுவலகத்தை திறந்து வைத்துள்ளேன். இந்த அலுவலகத்தின் ஊடாக வடக்கு மக்களின் பிரச்சனைகள் குறித்து பேச முடியும்.
நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள் அனைத்தும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு செல்வதாக கூறியதையடுத்து இந்த அலுவலகத்தை நான் வவுனியாவில் திறந்து வைத்துள்ளேன்.
வடக்கு மக்களுக்கும் ஜனாதிபதி அலுவலகம் ஊடாக தீர்த்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்க வேண்டும். இதற்காகவே இந்த அலுவலகத் தற்போது வவுனியாவில் ஸ்தாபிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் இளங்கோபன் ஊடாக இந்த பணிகள் முன்னெடுக்கப்படும். இங்கிருந்து அவர் பணியாற்ற இருக்கின்றார்.
இன்னும் ஒரு அதிகாரியை நியமனம் செய்து மேலதிக செயலாளர் ஜனாதிபதி செயலகத்திhல் இருந்து இந்த பணிகளை முன்னெடுக்கவுள்ளார்.
பிரச்சினைகள் குறித்து பேசிக்கொண்டு மட்டும் இருக்காமல் அந்தப் பிரச்சினைகளை ஆராய்ந்து இங்கு வந்து தீர்வு காணுமாறு அழைக்கின்றேன். இந்த அதிகாரிகள் மட்டுமன்றி அமைச்சு மட்டத்திலான அதிகாரிகளையும் அழைத்து வந்து மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.
இந்த அலுவலகத்திற்கு இன்னுமொரு மிக முக்கிய பணியும் பொறுப்பும் இருக்கிறது. நாட்டில் உள்ள அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து செயற்படும் பணி இந்த அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்டும்.தீவிரவாதத்தாலும், போராலும் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பிரிவினையை களைய வேண்டும்.
வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின்பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். போரினால், பயங்கரவாதத்தினால் இந்த நாட்டின் இறையாண்மைக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் தெற்கு மக்களுக்கும் சந்தேகம் இருக்கிறது. அதனையும் தீர்க்க வேண்டும். முஸ்லிம் மக்களுக்கு தமக்கான உரிமைகள் குறித்து அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார்கள்.
மலையக மக்களும் தமது பிரச்சனைகள் குறித்து தீர்வு காண முயற்சிக்கிறார்கள். அவர்களும் தம்மை தேசிய இனமாக இணைப்பது குறித்து பேசி வருகிறார்கள். இவை குறித்தும் தீர்வு காண வேண்டும்.
இதனால் மக்களுக்கு இடையில் இருந்த இடைவெளி தற்போது குறைந்துள்ளது. அதனால் தீர்வு காண வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இது கிரமமாக முன்னெடுக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுடனும், சிங்கள மக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிங்கள மக்களுடனும் பேச வேண்டியுள்ளது.
இங்கு ஒரு முக்கிய விடயம் உள்ளது. இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் போது நாட்டை பிளவுபடுத்தாமல் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதனால் அந்த மக்களின் சந்தேகங்களை தீர்க்க வேண்டியுள்ளது. நாம் ஒன்றிணைந்து பணியாற்றும் போது அந்தப் பிரச்சினைகளுக்கும், சந்தேகங்களுக்கும் தீர்வு காண முடியும்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களும் ஏனைய மக்களைப் போல் சமமான உரிமையப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
1983 ஆம் ஆண்டில் இருந்து மிக நீண்ட பயணம் மேற்கொண்டுள்ளோம். 2009 ஆம் ஆண்டில் இருந்தும் பயணித்திருக்கின்றோம். எனவே இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். இங்கு என்ன பிரச்சினை..? சிலர் வடக்கு பிரச்சினை என்கிறனர். சிலர் தமிழரின் பிரச்சினை என்கின்றனர். சிலர் இனப் பிரச்சினை என்கின்றனர். பலவாறு கூறுகிறார்கள். இவை அனைத்துக்கும் நாம் பொதுவாக எந்த சொற்பதத்தை பயன்படுத்த வேண்டும் என யோசிக்கின்றேன்.
தேசிய கீதத்தில் ஒரு வசனமே இருக்கிறது. 75 ஆவது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகின்ற போது ஒரு தாய் மக்களாக, ஒரே அணியாக சேர முடியும் என நம்புகின்றேன். அதனை செய்யக் கூடியதாக இருக்கும் எனவும் நம்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்காக வடக்கு மாகாணத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
வடக்கில் இதுவரையில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேவையான தீர்வுகளை வழங்குவதற்கு அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கலந்துரையாடப்பட்டுள்ள பிரச்சினைகள்
செட்டிகுளம் பகுதியில் 1994 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட தமிழ் மக்களுக்கு இதுவரை காணிகள் வழங்கப்படாமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இங்கு ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
செட்டிகுளம் பிரதேசத்தின் காணிப் பிரச்சினை தொடர்பில் மத்தியஸ்தம் செய்து 3 மாதங்களுக்குள் தீர்வு காணுமாறு வவுனியா மாவட்ட செயலாளருக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, இது தொடர்பில் நீதி அமைச்சு மற்றும் காணி அமைச்சிடம் விசாரணை செய்வதாகவும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
வடக்கு மாகாண மக்களின் வீட்டுப் பிரச்சினை தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், வடக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளன என்றும், அதற்கு மேலும் சுமார் மூவாயிரம் மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடளாவிய ரீதியில் தற்போது பல வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், வடக்கு மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு விரைவான தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
வவுனியா குளம் மற்றும் திருக்குளம் குளத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களின் தேவைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதன்போது ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைத்தல், உரப் பிரச்சினைக்கு தீர்வு காணல் மற்றும் விநியோக நடவடிக்கைகளை சீர்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
வடக்கு மாகாணத்தில் நிலவும் சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் வைத்தியர் பற்றாக்குறை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி தேவையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.
மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகத்தில் இடம்பெறும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் விளக்கமளித்ததுடன், அது தொடர்பில் விரைவாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
செய்தி-ராகேஷ்
நீண்டகால பிரச்சினையை தீர்க்க நாம் உறுதுணையாக இருப்போம்
நீண்டகால பிரச்சினையை தீர்க்க நாம் உறுதுணையாக இருப்போம் என ஜனாதிபதி முன்னிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு அபிவிருத்தி விசேட பிரிவு அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வடக்கு, கிழக்குகான இந்த செயலணியை திறந்து வைப்பதற்காக வருகை தந்தமைக்காக வடக்கில் இருந்து அவரை நாம் வரவேற்கின்றோம்.
வடக்கு, கிழக்குக்கு விசேடமான ஒரு நிதியை அவர் பிரதமராக இருந்த போது பனை நிதியம் என உருவாக்கியிருந்தார். போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மீள் எழுச்சிக்காக அது உருவாக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு பிரதேசத்தின் மீள் எழுச்சிக்காக அன்றே கவனம் செலுத்தியிருந்தார்.
தற்போது ஜனாதிபதியாக மிகவும் முக்கியமான இந்த நடவடிக்கையை முன்னெடுக்கும் போது நாம் வாழ்த்து கூறுகின்றோம். இந்த விடயத்தில் சேர்ந்து இயங்குவோம் என உறுதியளிக்கிறோம்.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட்ட போது சமஸ்டி தீர்வை முன்வைத்து போட்டியிட்டார். அந்த நேரத்தில் வடக்கு மாகாணம் கால்தடம் போட்டு விழ வைத்தது. தற்போது விழ வைத்தவர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக வந்திருக்கின்றார்.
மிக முக்கியமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தற்போது அமைச்சரவையில் இருக்கிறார். அவர்களுடைய ஆதரவையும் கொண்டு ஜனாதிபதியாக இருக்கும் நிலையில் இந்த நீண்டகால பிரச்சினைக்கு ஒரு ஆக்கபூர்வ முடிவை எடுப்பதாக சொல்லியிருக்கிறார். அதனை தீர்ப்பதற்கும் நாம் உறுதுணையாக இருந்து செயற்படுவோம் என தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்-திலீபன்











தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
