ஜனாதிபதி கடினமான சந்தர்ப்பத்தில் பொறுபேற்று நாட்டை சரியாக வழிநடத்துகிறார்:இத்தேபானே தர்மலங்கார தேரர்
மிகவும் கடினமான சந்தர்ப்பத்தில் நாட்டை பொறுப்பேற்று சரியான வழியில் வழிநடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முடிந்துள்ளது என ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையின் மாநாயக்கரும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தருமான இத்தேபானே தர்மலங்கார தேரர் தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று பிற்பகல் கோட்டே ருக்மலே தர்ம விஜயாலோக விகாரைக்கு சென்று மாநாயக்கர் மற்றும் அவர் தலைமையிலான பிக்குமாரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட பின்னர் கருத்து வெளியிடும் போதே தர்மலங்கார தேரர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள தர்மலங்கார தேரர்,
ஜனாதிபதியாக பதவிக்கு வந்தது குறித்து மகிழ்ச்சியடையும் மகா சங்க சபையினர்
நீங்கள் தொன்று தொட்டு மகா சங்க சபையினருட் மிக நெருக்கமாக செயற்பட்ட தலைவர். நீங்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தது குறித்து மகா சங்க சபையினர் என்ற வகையில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.
உங்களுக்கு அரசியல் தொடர்பான சிறந்த புரிதலும் அனுபவமும் இருக்கின்றது. அண்மையில் உங்களது வீடு மற்றும் நீங்கள் உயிரை போல் நேசித்த நூல்கள் அழிக்கப்பட்டமை தொடர்பாக நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம்.
வரம்புகளை மீறி அரசியலில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் மற்றும் சமய தலைவர்கள்
கடந்த காலங்களில் சில பிக்குமார் மற்றும் சமய தலைவர்கள் தமது வரம்புகளை மீறி அரசியலில் ஈடுபட்டது தொடர்பாக நாங்கள் கவலையடைகின்றோம்.
மகா சங்கத்தினர் என்ற வகையில் எமக்கு உங்களுக்கு ஆலோசனைகளை மாத்திரமே வழங்க முடியும். அரசுக்கு மக்களுக்கு இடையில் நம்பிக்கை கட்டியெழுப்பு தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனினும் கடந்த காலங்களில் அப்படி நடக்காத காரணத்தினால் மோதலான நிலமையை சந்திக்க நேரிட்டது. எமது நாட்டில் காணப்பட்ட நிலைமையால் அரசியலமைப்பில் இருக்கும் எதனையும் நடைமுறைப்படுத்த முடியாது போனது.
சட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி கடமைப்பட்டுள்ளார்
சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஆட்சியாளர் என்ற வகையில் நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள். அது தவறு அல்ல. நீங்கள் இந்த நாட்டின் சகல மக்களுக்கு அமைதியான வாழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம் என தர்மலங்கார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடு மற்றும் மக்களின் பாதுகாப்புக்காக அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய செயற்பட நேரிடும்
இங்கு கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி தனிப்பட்ட ரீதியில் எப்படியான நஷ்டங்கள் ஏற்பட்டாலும் நாடு மற்றும் மக்களின் பாதுகாப்புக்காக தான் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய செயற்பட நேரிடும் எனக் கூறியுள்ளார்.
நாடு ஒன்றை முன்நோக்கி கொண்டு செல்ல சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
விகாரைக்கு சென்ற ஜனாதிபதியை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, முன்னாள் அமைச்சர்கள் தயா கமகே மற்றும் அனோமா கமகே ஆகியோர் வரவேற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.