பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம் குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள ஆட்சேபனை
பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னக்கோனை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து நேற்று அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wikremesinghe), பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் தனது ஆட்சேபனையை முன்வைத்துள்ளார்.
இதன்போது, அமைச்சர்கள் மத்தியில் பேசிய ஜனாதிபதி ரணில்,
"பதில் பொலிஸ் மா அதிபரின் கீழ் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசியலமைப்பில் இடமில்லை. அப்படி ஜனாதிபதித் தேர்தல் இதற்கு முன்னர் நடந்ததில்லை.
சிவில் பாதுகாப்பு
பதில் பொலிஸ் மா அதிபரின் கீழ் தேர்தலைக் கூட அறிவிக்க முடியாது. தேர்தலுக்கு தேவையான சிவில் பாதுகாப்பு பொலிஸாரிடம் உள்ளது.
எனவே, நாடாளுமன்ற தெரிவு குழுவொன்றை நியமித்து இந்த விடயங்களை ஆராய வேண்டும். அந்த தெரிவுக்குழு ஆராய்ந்து முடிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க முடியாது.
அப்படியே அறிவித்தாலும் நடத்த முடியாது. இந்தப் பின்னணியில் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இன்று அல்லது நாளை அறிவிக்கப்படவிருந்த போதும் அது திட்டமிட்டபடி மேற்கொள்ளப்படுமா என்பதில் ஐயம் ஏற்பட்டுள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளாார்.
குழப்ப நிலை
இந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவை சேர்ந்த சிரேஸ்ட அதிகாரியொருவர்,
"எமது ஆணைக்குழு, பொலிஸ்மா அதிபர் அல்லது பதில் பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொள்ளவேண்டிய தேவைகள் உள்ளன.
தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் பொலிஸ்மா அதிபர் பதவியில் அல்லது பதில் பொலிஸ்மா அதிபர் பதவியில் ஒருவர் காணப்படுவது அவசியம்.
இல்லாவிட்டால் யாரை தொடர்பு கொள்வது என்ற குழப்பநிலைக்குள் நாங்கள் தள்ளப்படலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |