ரணில் நீண்டகாலம் பதவியில் இருக்க வேண்டும்: பிள்ளையான் தெரிவிப்பு
தொங்குபாலத்தினை கடந்து ஒரு உறுதியான பொருளாதார கட்டமைப்பை உருவாக்க வேண்டுமானால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இன்னும் சிறிதுகாலம் நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்)(Pillaiyan) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் காலநிலைக்கு சீரமைவான விவசாய நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இன்று (11.05.2024) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"உறுதியான சிறந்த திட்டத்துடன் உள்ள தலைவர்கள் யாரையும் இந்த நாட்டில் காணமுடியாத நிலையில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவரை ஆதரிக்க எமது கட்சி நடவடிக்கையெடுக்கும்.
ஜனாதிபதிக்கு ஆதரவு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 06 பில்லியன் ரூபா செலவில் வீதி அமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 07 பில்லியன் ரூபா செலவில் வீதி அபிவிருத்திப்பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மேலும், உறுமய திட்டத்தின் ஊடாக காணி பகிந்தளிப்பு தொடர்பாக அரசாங்க
அதிகாரிகளுக்கிடையிலே அதன் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடினோம்.
நாட்டில் 20 இலட்சம் காணி பகுதிகளை விரைவாக வழங்க வேண்டும் என்ற வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார்.
அதற்கு உதவி செய்யுமுகமாக மட்டு மாவட்டத்தில் 27,000 ஏக்கர் காணி பகிர்ந்தளிக்க வேண்டியிருக்கின்றது. அதனை விரைவுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அந்தவகையில் 514 பேருக்கான காணி பகிர்ந்தளிப்பு இடம்பெற்றுள்ளது.
எனவே, இதில் உள்ள குறைபாடுகளை விரைவாக நிவத்தி செய்து கொண்டு அனைவருக்கும் உறுமய வேலைத்திட்டதின் ஊடாக விரைவாக காணி கையளிப்பு இடம்பெற ஏற்பாடு செய்துள்ளோம். அதில் நிர்வாக ரீதியாக மக்கள் காணி உறுதிபத்திரம் வழங்க அச்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசேட வேலைத்திட்டங்கள்
உறுமய திட்டத்தில் இந்த உற்பத்திகளை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தில் உலக வங்கி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றுவருகின்றது. இது கடந்தகால பொருளாதார பிரச்சினை காரணமாக பின்னடைந்துள்ளதுடன் தற்போது அதில் வனபலபரிபாலன சபை மற்றும் தொல்லியல் திணைக்கள பிரச்சினை காரணமான திட்டங்களை நடைமுறைபடுத்துவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதால் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தோம்.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் 10 மாதத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாடாளுமன்ற தேர்தல் முதலில் நடந்தால் நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து. இருந்த போதும், ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டாக வேண்டும். நாடு ஒரு சிக்கலான சூழலில் இருந்தது. அதிலிருந்து மீட்டு நம்பிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் அவர், நாங்கள் ஒரு தொங்கு பாலத்தால் நடந்து செல்வதாகவும் இந்த பாலத்தை கடந்துதான் ஆகவேண்டும் என தெரிவித்துள்ளார். எனவே, அந்த பாலத்தை கடந்து உறுதியான ஒரு பொருளாதார கட்டமைப்பு உருவாக வேண்டுமாக இருந்தால் அவர் இந்த நாட்டுக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என்பதே நிலைப்பாடு என எங்களுடைய கட்சியில் நினைக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல் : பவன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |