ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம்:சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த சந்தேக நபர்களில் இருவர் அடையாளம் காணும் அணி வகுப்பில் நிறுத்துவதற்காக விளக்கமறியலில் வைக்கப்ப்டுள்ளதுடன் போதுமான கால அவகாசம் இருக்கவில்லை என்ற காரணத்தினால், இன்று அடையாளம் காணும் அணி வகுப்பு நடத்தப்படவில்லை.
இந்த நிலையில், எதிர்வரும் 27 ஆம் திகதி இவர்கள் அடையாளம் காணும் அணி வகுப்பை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜா-எல, காலி, கல்கிஸ்சை பிரதேசங்களை சேர்ந்த 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தீ வைப்புக்கு உள்ளான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டில் இருந்த நூல்கள் தேசிய பெறுமதிமிக்கவை என்பதால், இது சம்பந்தமாக சுயாதீன விசாரணை நடத்தப்படுவது அவசியம் என பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மிஸ்பாக் சத்தார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் இன்னும் சுதந்திரமாக வெளியில் இருப்பதாக சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.



