ரணில் அரசாங்கம் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது! நம்பிக்கை வீண் போகவில்லை: அசாத் சாலி பெருமிதம்(Video)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் நிலைமையை மாற்றுவார் என்று நாங்கள் கூறியது தற்போது நடந்துவிட்டது என மேல் மாகாண முன்னாள் ஆளுநரும், தேசிய ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“இன்றுடன் ரணில் ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகின்றது. அன்று நாங்கள் ரணில் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது கூறிய விடயம் என்னவெனில் ரணில் தேசிய பட்டியலில் 8 மாதத்திற்கு பின்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார் அது தாமதம் என்றும் அவர் முதலிலே நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருக்க வேண்டும் என கூறினோம்.
மேலும், அவரின் அரசியல் அனுபவத்தின் ஊடாக மாத்திரமே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் அதனால் அவர் பிரதமராவார் என கூறினோம் அது நடந்தது. அதேபோன்று ஜனாதிபதியாவார் என கூறினோம் அதுவும் நடந்தது.
ரணில் ஆட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
ராஜபக்சர்களால் நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் பதவியேற்ற ஒரு மாத்திற்குள் பல மாற்றங்களை ரணில் செய்துவிட்டார்.
ராஜபக்சர்களின் ஆட்சியில் எரிவாயு இல்லை, பெட்ரோல் இல்லை உரம் இல்லை அனைத்திற்கும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை காணப்பட்டுள்ளது. ஆனால் அன்று நாட்டில் வரிசைகள் இல்லை மக்களுக்கு தேவையான பொருட்கள் நாட்டில் உள்ளன.
பொருட்களின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் ஓரளவேனும் குறைந்துள்ளது. ரணில் ஆட்சிக்கு வருகை தந்தால் நாட்டில் மாற்றம் ஏற்படும் என்ற எமது நம்பிக்கை காப்பாற்றப்பட்டுள்ளது.”என கூறியுள்ளார்.