சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்கப்படாது:சர்வக்கட்சி வேலைத்திட்டம் குறித்து கவனம் செலுத்தும் ஜனாதிபதி
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் அரசாங்கத்தில் இணையாது என்பதால், சர்வக்கட்சி அரசாங்கத்தை உருவாக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வக்கட்சி வேலைத்திட்டம்
இதன் காரணமாக சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பதிலாக சர்வக்கட்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ஏற்கனவே தேசிய மக்கள் சக்தியை தவிர நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி யோசனைகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
பிரதமர் தலைமையில் மற்றுமொரு பேச்சுவார்த்தை நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றதுடன் எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது.
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய சில அரசியல் கட்சிகள் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது எனவும் சில கட்சிகள் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளாது ஆதரவு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன. சில அரசியல் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவளிக்க உள்ளன.
இது சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் விடயங்களை தெளிவுப்படுத்தியுள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
கட்சிகள் வழங்கிய யோசனைகள் அனைத்து கட்சிகளுக்கும் வழங்கப்படவுள்ளதுடன் அடுத்த வாரம் யோசனைகளை பெற்று வேலைத்திட்டத்தை உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் தற்போது 18 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சிகளில் இருந்து தனித்தனியாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து அரசாங்கத்தில் இணையவுள்ளதால், அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.
இந்த நிலையில், ராஜாங்க அமைச்சர்கள் அடுத்த வாரம் பதவியேற்க திட்டமிட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் உட்பட சுமார் 15 பேர் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.