ரணில் ஆட்சியில் பொருளாதாரம் மீண்டதா.. நளிந்த ஜயதிஸ்ஸ மறுப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீட்கப்பட்டுவிட்டது என்றும், நல்லதொரு பொருளாதாரக் கையிருப்போடு நாட்டைத் தற்போதைய அரசிடம் ரணில் விக்ரமசிங்க கையளித்தார் என்றும் கூறப்படுவதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. அது முற்றிலும் பொய்யான கூற்று என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நாடு முன்னேற்றம் கண்டிருக்க வேண்டும்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2022ஆம் ஆண்டில் நாடு கடன் செலுத்த முடியாமல் வங்குரோத்தடைந்திருந்தது என்பது தெளிவான உண்மையாகும். ஆனால், தற்போதைய அரசு 2024ஆம் ஆண்டின் பின்னர்தான் ஆட்சியைப் பொறுப்பேற்றது.
ரணில் விக்ரமசிங்க நாட்டை ஸ்திரப்படுத்தி நல்லதொரு கையிருப்போடு நாட்டை வழங்கினார் எனக் கூறுவதில் உண்மையில்லை. அவ்வாறாயின் சர்வதேசப் பொருளாதாரத் தரப்படுத்தல்களில் இந்நாடு முன்னேற்றம் கண்டிருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை.

2017இல் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்திலும் அரசின் மொத்த வருமானத்துக்கும், கடன்களுக்கான வட்டிச் செலவுகளைத் தவிர்த்த ஏனைய செலவுகளுக்கும் இடையிலான நேர்மறையான வேறுபாடு குறைவாகவே இருந்தது.
அவ்வாறு அன்று திறைசேரி நிரம்பியிருந்தமை உண்மையென்றால், அக்காலப்பகுதியில் ஏன் அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் உயர்த்தப்படவில்லை?
வங்குரோத்து நிலையிலிருந்த நாட்டைப் பொறுப்பேற்று, பல பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்குத் தேவையான சம்பள அதிகரிப்புகளையும் நிவாரணங்களையும் தற்போதைய அரசு படிப்படியாக வழங்கி வருகின்றது. எதிர்காலத்திலும் இவ்வாறான நேர்மறையான செயற்றிட்டங்களை அரசு தொடர்ச்சியாக முன்னெடுக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.