சீர்திருத்தங்களுக்கு அரசாங்கம் தயாரா..! கேள்வி எழுப்பும் ரணில்
இலங்கை தனது எதிர்காலத்தைப் பாதுகாக்க விரைவான பொருளாதார வளர்ச்சியையும் துணிச்சலான சீர்திருத்தங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
நடப்பு விவகாரங்கள் தொடர்பில் உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் இந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
இதன்போது, பொருளாதாரம் முன்னேற, சீர்திருத்தங்கள் தேவை என்பதை வலியுறுத்தினார். அதே நேரத்தில் தற்போதைய அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவுடனான உறவு
இந்தப் பொருளாதாரம் முழுமையான சந்தைப் பொருளாதாரம் அல்ல. நாம் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். முன்னேற, பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். எனினும் தற்போதைய அரசாங்கம், மாற்றங்களைச் செய்யத் தயாராக உள்ளதா என்று தனக்குத் தெரியவில்லை.
ஆனால் பெரிய மாற்றங்கள் இல்லாமல், வெளிநாட்டுப் பணத்தைப் பெறாமல் இவற்றை மேற்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். நாடுகளுடன் நட்பாக இருப்பது, இதில் முதல் படியாக இந்தியாவுடன் நட்பாக பணியாற்ற வேண்டும்.
இந்த உலகில் இலங்கை தனியாக இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது ஆட்சிக் காலத்தில் இலங்கையின் வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கையாண்ட விதத்தை நியாயப்படுத்தியுள்ளார்.
அவரது அரசாங்கம் உலக சக்திகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக "பன்முகத்தன்மை" என்ற உத்தியைப் பின்பற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.
"நாங்கள் எங்கள் அனைத்து நண்பர்களுடனும் இணைந்து செயல்படுகிறோம். சீனாவுடன் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது, அந்த உறவு தொடர்ந்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகம், துறைமுக நகரம் போன்ற பெரிய திட்டங்கள் எங்களிடம் உள்ளன ஆனால் இலங்கை வளராவிட்டால், இந்த திட்டங்கள் மூலம் சீனாவால் வருமானத்தைப் பெற முடியாது.
சீனா - இலங்கை நட்பு
எனவே, இந்த முதலீடுகளின் வருமானத்தை உறுதி செய்ய இலங்கை கணிசமாக வளர வேண்டும். நாம் குறைந்தது ஐந்து மடங்கு வளர வேண்டும், நாம் பத்து மடங்கு வளர்ந்தால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள், ஏனெனில் அவர்களின் திட்டங்களின் வருமானம் விரைவாக கிடைக்கும் என்று ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனா நமக்கு உதவ தயாராக உள்ளது, ஆனால் நாம் வளரவில்லை என்றால், அவர்கள் நம்மை மறந்துவிடுவார்கள். சீனாவும் இந்தியப் பெருங்கடலுக்குள் ஒரு பொருளாதாரத்தை உருவாக்கப் போகிறது. நாமும் அதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் ரணில் தெரிவித்துள்ளார்
இந்தியாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தை அங்கீகரிக்கும் அதே வேளையில், இலங்கை, இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் பொருளாதார அபிலாஷைகளுடன் தன்னை ஒருங்கிணைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தைப் பற்றி உரையாற்றிய விக்ரமசிங்க, கொள்கை நிலைத்தன்மையைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்
இலங்கை ஐஎம்எப் பிணை எடுப்பைத் தவிர்த்திருக்கலாம் என்ற கருத்துக்களை அவர் நிராகரித்துள்ளார். ஐ எமஎப் வழியாகச் செல்லாமல் நாம் மீள முடியாது என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |