ரணில் நடத்திய நாடகம்.. வைத்தியசாலையில் புத்தகத்துடன் வெளியான புகைப்படத்தால் புதிய சர்ச்சை
ரணில் விக்ரமசிங்க, கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து பின்னர், உடல்நிலை பாதிப்பால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கியிருந்து புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் பொதுச் சொத்து துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நடைபெற்று வரும் விசாரணைகளை ஒரு மாதத்திற்குள் முடித்து வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் நேற்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கூண்டில் அமர்ந்திருந்த ரணில்..
இதன்போது, விசாரணைகளில் தொண்ணூறு சதவீதம் இதுவரை நிறைவடைந்துள்ளதாக அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணையின் போது முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தொடர்பாகவும் விசேட தீர்ப்பு அறிவிக்கப்பட்டதுடன், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
வழக்கு நடவடிக்கைகளின் ஆரம்பத்திலேயே விசாரணை அதிகாரிகளின் சார்பில் கருத்துத் தெரிவித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், சந்தேகநபரான ரணில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளாரா என்று வினவியுள்ளார்.
இதன்போது, அவர் பிரதிவாதி கூண்டில் அமர்ந்திருந்ததாக பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதற்கு எதிராக கருத்துத் தெரிவித்த திலீப பீரிஸ், சந்தேகநபர் நீதிமன்றத்தில் அமர்வதற்கு முன் அதற்கான முன் அனுமதி பெறப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நீதவானும் அந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, நீதிமன்றத்தில் அமரும்போது உரிய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் புத்தகங்களுடன்..
முன்னதாக ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட போது, அவருக்கு பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்டு பின்னர் உடல்நிலை குறித்து முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் கடுமையான விமர்சனத்தை முன்வைக்கப்பட்டுள்ளன.

மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறி பிணையில் சென்ற ரணில், தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கியிருந்து புத்தகங்களை வாசிப்பதன் மூலம் பொதுச் சொத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், இந்த வழக்கில் அடிப்படையாக அமைந்த வெளிநாட்டுப் பயணம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்னாள் அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது.
அத்துடன், முன்னாள் தூதுவர் சரோஜா சிறிசேன உட்பட 13 பேரின் சாட்சியங்களின்படி இது ஒரு தனிப்பட்ட பயணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏக்கநாயக்க செய்த மோசடி..
முறைப்பாட்டின் விடயங்களைக் கருத்திற்கொண்ட நீதவான், இது ஒரு தனிப்பட்ட பயணம் எனப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்த போதிலும், சந்தேகநபரான ரணிலுக்கு கிடைத்ததாகக் கூறப்படும் வுல்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் அழைப்புக் கடிதத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள இணையவழி மூலம் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலம் பெறுமாறு உத்தரவிட்டுள்ளார்.
பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் இந்த விஜயம் ஒரு உத்தியோகபூர்வ விஜயம் என நிரூபிக்க முயன்ற போதிலும், பிரித்தானிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்போ அல்லது தலையீடோ அதற்கு இருக்கவில்லை எனவும், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் ஒரு தனியார் நிறுவனம் எனவும் முறைப்பாடு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தொடர்பில் கருத்துத் தெரிவித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், அவர் ஆவணங்களில் இருந்த "தனிப்பட்ட" (Private) என்ற சொல்லை நீக்கி "அதிகாரபூர்வ" (Official) என்ற சொல்லைச் சேர்த்து மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
எவ்வாறாயினும், சமன் ஏக்கநாயக்கவுக்காக முன்னிலையான சட்டத்தரணிகள் பிணை கோரிய போதிலும், 16 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அரசாங்க நிதியை அங்கீகரிக்கும் போது அவர் பொறுப்புள்ள அதிகாரியாக உரிய கவனத்தைச் செலுத்தாததால், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் அவருக்கு பிணை வழங்க நீதவான் மறுத்துள்ளார்.
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam