மீண்டும் ஒரே மேடையில் ரணில் மற்றும் சஜித்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் நாளை (17) நடைபெறவுள்ள அரசியல் நிகழ்வொன்றில் ஒரே மேடையில் சந்திக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி தனியாக பிளவுபட்டதன் பின்னர் , ரணிலும் சஜித்தும் பொதுவெளியில் எந்தவொரு நிகழ்விலும் ஒன்றாகக் கலந்துகொள்ளவில்லை.
அதிதிகளாக ஒரே மேடையில்
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள அரசியல் ரீதியான ஒரு நிபுணத்துவ கலந்துரையாடல் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்தும் பிரதம அதிதிகளாக ஒரே மேடையில் கலந்து கொள்ளவுள்ளனர்.

மகாமான்ய டி. எஸ். சேனாநாயக்க அரசியல் பீடத்தின் பழைய மாணவர் சங்கம் (DSSPA Alumni Club) முதன்முறையாக ஏற்பாடு செய்யும் 'ஜே.ஆர். ஆளுகையும் நடுநிலையும்' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
கொழும்பு 07 இல் அமைந்துள்ள தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சபை கேட்போர் கூடத்தில் நடைபெறும் இந்த நிபுணத்துவ கலந்துரையாடல் நாளை பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு அரசியல் தரப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி பல முன்னணி சிரேஷ்ட தலைவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.