அர்ச்சுனாவின் காரில் இருக்கும் ஆபத்தான ஆயுதம்.. பகிரங்கப்படுத்திய அர்ச்சுனா
சொந்த பாதுகாப்பிற்காக வாளை ஏந்தி வருவதாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறியுள்ளார்.
தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், அரசாங்கம் தனக்கு பாதுகாப்பு வழங்காததால், இவ்வாறு வாளை வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சபாநாயகர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு தான் அறிவித்துள்ளதாக அர்ச்சுனா குறிப்பிட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு அறிவிப்பு
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், இதற்கு முன்னர் இரண்டு முறை எழுத்துப்பூர்வமாக பாதுகாப்பு கோரிய போதிலும், அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தனது சொந்தப் பாதுகாப்பிற்காக ஒரு துப்பாக்கியைக் கோரிய போதிலும், அதற்கும் அரசாங்கத்திடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பின்னர் விலங்குகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு ஸ்ப்ரே துப்பாக்கியைக் கோரிய போதிலும், அதற்காக அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் தனக்குக் கிடைக்கவில்லை என்றும் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, தனது சொந்த பாதுகாப்பிற்காக ஒரு வாளை தன்னுடன் வைத்திருப்பதாகவும், அதை எப்போதும் தனது காரில் வைத்திருப்பதாகவும், இது குறித்து சபாநாயகர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அர்ச்சுனா தெரிவித்ததாக குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |