தமிழரசுக்கட்சியின் செல்வாக்கை சரித்த சம்பந்தன்.. மீண்டும் அரங்கிற்குள் ஏக்கியராச்சியம்!
தமிழரசுக்கட்சியின் செல்வாக்கு வடக்கு மாகாணத்தில் வீழ்ச்சியடைவதற்கு ஏக்கியராச்சிய யோசனையை சம்பந்தன் தலைமை ஏற்றுக் கொண்டதும் ஒரு காரணமாக அமைந்தது என அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில்,
மைத்திரி - ரணில் - சம்பந்தன் ஆகியோரின் கூட்டு அரசாங்கமான நல்லாட்சி அரசாங்கத்தின் ஏக்கியராச்சிய தீர்வு யோசனை மீண்டும் அரங்கிற்கு வந்துள்ளது. இதனை மீண்டும் அரங்கிற்கு கொண்டு வந்தவர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தான்.
நாடாளுமன்ற விவாதம்
சுவிஸ் அரசாங்கத்தினால் அந்நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட சமஸ்டி தொடர்பான செயலமர்வு அரங்கில் தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் அங்கு அதனை பிரஸ்தாபித்திருந்தார். இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஏக்கியராச்சிய தீர்வு யோசனையை தாம் புதிய அரசியல் யாப்பில் சேர்க்க இருப்பதாகவும் அதைப்பற்றி முழுமையாகத் தீர்மானித்து விட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
அந்தச் செயலமர்வு அரங்கில் கலந்து கொண்ட கஜேந்திரகுமார் உடனடியாக அதனை எதிர்த்ததுமல்லாமல் நாடு திரும்பியவுடன் அதனை எதிர்த்துப் பிரச்சாரத்தை முடக்கி விட்டுள்ளார். பல்வேறு சிறிய சிறிய கருத்தரங்குகளில் அதனைப்பற்றிய தெளிவூட்டல்களை வழங்கி வருகின்றார்.

ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளான தமிழரசுக் கட்சியோ ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, இந்த விவகாரத்தில் எந்த அக்கறையையும் காட்டவில்லை. கஜேந்திரகுமாரின் எதிர்வினைகளினாலேயே இந்த விவகாரம் மீண்டும் சிறியளவில் அரங்கிற்கு வந்துள்ளது. ஊடக மட்டத்தில் இது தொடர்பான கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.
ஏக்கியராச்சிய யோசனை இடைக்கால அறிக்கை என்ற அடிப்படையிலேயே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நான்கு நாட்கள் விவாதமும் இடம்பெற்றது. இறுதியில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு பிரச்சினை வந்ததால் விவகாரம் கிடப்பில் போடப்பட்டது. மகிந்த பிரிவினர் இனவாத நிலையில் நின்று கடுமையாக எதிர்த்தனர்.
தமிழரசுக்கட்சியின் வீழ்ச்சி
முஸ்லிம் தரப்பில் ரவூப் ஹக்கீம் தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்தாலும் அதாவுல்லா, ஹிஸ்புல்லா போன்றோர் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் நிலை நின்று கடுமையாக எதிர்த்தது. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் எதிர்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
தமிழ் சிவில் சமூகம் ஊடகவியலாளர் மாநாட்டின் மூலம் எதிர்ப்பைக் காட்டியது. மகாநாயக்கர்களும் பேரினவாத நிலை நின்று எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். அவர்களின் கருத்துக்கள் வழமை போன்று மிகைப்படுத்தப்பட்டவையாகவே இருந்தன. 1981இன் மாவட்ட அபிவிருத்திச்சபை, 1988இன் மாகாண சபை என்பவற்றையும் இவர்கள் எதிர்த்ததால் இதற்கு ஏற்பட்ட எதிர்ப்பு ஆச்சரியப்படத்தக்கதாக இருக்கவில்லை.

தமிழ்ச் சூழலில் இந்த யோசனை இடைக்கால அறிக்கை என்றோ நல்லாட்சி அரசாங்கத்தின் தீர்வு யோசனை என்றோ அழைக்கப்படவில்லை. மாறாக ஏக்கியராச்சிய யோசனை என்றே அழைக்கப்பட்டது. சுமந்திரன் ஏக்கியராச்சிய பதத்தினை நியாயப்படுத்தியமையினாலேயே அந்தப் பெயர் முன்னிலைக்கு வந்தது.
சுமந்திரன் தற்போதும் அதனை நியாயப்படுத்த தயங்கவில்லை. சி.வி.கே.சிவஞானம் மட்டும் தலையிலடித்து சத்தியம் செய்தது போல ஏக்கியராச்சிய யோசனையை தமிழரசுக்கட்சி ஒரு போதும் ஏற்காது என சத்தியம் செய்து வருகின்றார். தமிழரசுக்கட்சியின் செல்வாக்கு வடக்கு மாகாணத்தில் வீழ்ச்சியடைவதற்கு ஏக்கியராச்சிய யோசனையை சம்பந்தன் தலைமை ஏற்றுக் கொண்டதும் ஒரு காரணமாக அமைந்தது - எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |